இணையதளத்திற்கு வரும் நாடகங்கள்

தினமலர்  தினமலர்
இணையதளத்திற்கு வரும் நாடகங்கள்

என்னதான் சினிமா தியேட்டர்கள் நிறைந்திருந்தாலும் இப்போதும் நாடகத்திற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் வாணி மஹால், ராணி சீதை ஹால், தியாராயர் மன்றம், கிருஷ்ண சபா, கர்நாடக சபா, ரசிக ரஞ்சன சபா, மியூசிக் அகடாமி போன்றவை நாடகத்தால் நிறைந்து கொண்டிருந்தது.

ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்ட பலரின் நாடக குழுக்கள் தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது போன்றே நாடக அரங்குகளும் மூடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் சினிமாக்கள் ஓடிடி தளத்திற்கு செல்வது போன்று நாடகங்கள் இணைய தளத்திற்கு வருகிறது. அமெச்சூர் ஆர்டிஸ்ட் சார்பில் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடிக்கும் 'காதலிக்க நேரமுண்டு' நாடகம் முதன் முறையாக இணையதளத்திற்கு வருகிறது. இந்த நாடகத்தை நாளை முதல் (ஆகஸ்ட் 2) 100 ரூபாய் பணம் செலுத்தி வீட்டில் இருந்தே பார்க்கலாம்.

இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இது நாள் வரையில் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கில் சென்று பார்த்து ரசிக்க, இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய சேவை செய்தது. தற்போதுள்ள நிலைமையைக் கருதி, சிறந்த நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், உங்கள் இல்லத்திற்கே, வருகிறது.

ரூபாய் நூறு மட்டுமே செலுத்தி, தமிழில் முதன்முறையாக காதலிக்க நேரமுண்டு முழுநீள நகைச்சுவை நாடகம் உங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்கள் இல்லத்திற்கே வரவிருக்கிறது. சிறந்த தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், ரசிகர்களை நேரிடையாக சென்றடையும் ஒரு அரிய வாய்ப்பாக இந்த துவக்கம் அமையும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை