மறக்க முடியுமா? - நல்லவனுக்கு நல்லவன்

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  நல்லவனுக்கு நல்லவன்

படம்: நல்லவனுக்கு நல்லவன்
வெளியான ஆண்டு : 1984
நடிகர்கள் : ரஜினி, ராதிகா, கார்த்திக், விசு
இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,

ஏ.வி.எம்., நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய, நல்லவனுக்கு நல்லவன், 150 நாட்களுக்கு மேல் ஓடி, மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தர்மாத்முடு என்ற தெலுங்கு படத்தைத் தழுவி, இப்படத்தின் கதையை உருவாக்கி, வசனமும் எழுதியிருந்தார் விசு.

உள்ளூர் ரவுடியாக இருக்கும் ரஜினி, மனைவி ராதிகாவின் வழிகாட்டுதலில், மனம் மாறுகிறார். விசுவின் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து, அவரின் அன்பை பெறுகிறார். தொழிற்சாலையை பாதுகாக்கும் பொறுப்பு ரஜினிக்கு கிடைத்ததால், விசுவின் மகன் கார்த்திக், அவரை வெறுக்கிறார். ரஜினியை பழிவாங்க, அவரின் மகளை திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் நடக்கும், 'சென்டிமென்ட் ஆக் ஷன்' தான், படத்தின் கதை.

லோக்கல் ரவுடி, குடும்ப தலைவன், உழைப்பாளி, தொழிலதிபர் என, பன்முகம் காட்டும் வாய்ப்பு, ரஜினிக்கு கிடைத்தது. அதை, எந்த நெருடலும் ஏற்படாத வகையில், அவர் பூர்த்தி செய்திருப்பார். மகளின் திருமணத்தின் போதும், மனைவியின் மரணத்தின் போதும், ரஜினிக்குள் இருக்கும் நடிப்பாற்றல், நம்மை வியக்கச் செய்யும். சினிமா ரசிகர் சங்கம், பிலிம்பேர் விருதுகள், ரஜினிக்கு கிடைத்தன. இப்படத்திற்கு பின், தமிழக அரசின், 'கலைமாமணி' விருதும், அவருக்கு கிடைத்தது.

ரஜினியுடன், கார்த்திக் இணைந்து நடித்த முதல் படம். முதலில், கெட்டவனாக இருந்து, இறுதியில் மனம் மாறும் கதாபாத்திரம். இளையராஜாவின் இசையில், 'எங்க முதலாளி, வச்சுக்கவா உன்னை மட்டும், உன்னைத் தானே தஞ்சம் என்று...' உள்ளிட்ட அனைத்து பாடல்களும், இன்றும் நம் காதுகளில் ஒலித்தபடியே இருக்கின்றன. நல்லவனுக்கு நல்லவன் என பெயர் வாங்க, மனைவி சொல்லே மந்திரம் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூலக்கதை