டிராவிட் கற்றுத்தந்த பாடம்: புஜாரா பெருமிதம் | ஜூன் 27, 2020

தினமலர்  தினமலர்
டிராவிட் கற்றுத்தந்த பாடம்: புஜாரா பெருமிதம் | ஜூன் 27, 2020

புதுடில்லி: ‘‘கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று டிராவிட் எனக்கு கற்றுக் கொடுத்தார்,’’ என, புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ பேட்ஸ்மேன் புஜாரா 32. இதுவரை 77 டெஸ்டில், 5,840 ரன்கள் (18 சதம், 25 அரைசதம்) எடுத்துள்ளார். இவரை, முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் (164 டெஸ்ட், 13,288 ரன்கள் மற்றும் 344 ஒருநாள், 10,889 ரன்கள்) உடன் ஒப்பிடுகின்றனர்.

இதுகுறித்து புஜாரா கூறியது: ராகுல் டிராவிட் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு வரியில் கூற இயலாது. எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து எனது சிந்தனையை வெளியே கொண்டு வர உதவினார். இதுகுறித்து அவரிடம் பேசிய போது தெளிவான விளக்கம் கிடைத்தது. தொழில்முறை கிரிக்கெட், சொந்த வாழ்க்கை இரண்டையும் தனித்தனியே வைத்திருப்பதை கவுன்டி கிரிக்கெட்டில் பார்த்துள்ளேன்.

கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்தாலும், அதிலிருந்து வெளியே வர எனக்கு தெரியும். கிரிக்கெட்டுக்கு வெளியே ஒரு வாழ்க்கை உள்ளது, பேட்டிங்கில் தொழில்நுட்பத்தை தாண்டி வேறு சில விஷயங்கள் உள்ள என்பதை டிராவிட் எனக்கு கற்றுக்கொடுத்தார்.

எங்களுடைய ‘பேட்டிங் ஸ்டைலில்’ ஒற்றுமை இருக்கலாம். இது, அவரை எனக்கு பிடிக்கும் என்பதால் உருவானதல்ல. சதமடித்தால் மட்டும் போதாது, அணியின் வெற்றிக்காக கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்பதை சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் போது கற்றுக் கொண்டேன்.

இவ்வாறு புஜாரா கூறினார்.

மூலக்கதை