மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 60.29 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், 60.29 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த நிதியாண்டில், 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 2.58 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன. கடந்த நிதியாண்டில், 21.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.இறக்குமதியை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதத்தில், 53.74 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த நிதி ஆண்டில் இறக்குமதி, 18 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதத்தில், வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்து உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், புண்ணாக்கு, இரும்புத்தாது, சணல் தயாரிப்புகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், அரிசி, மசாலா பொருட்கள், இறைச்சி, தயிர் உள்ளிட்டவை அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது மேலும் மருந்துகள், ரசாயனங்கள், பெட்ரோலிய பொருட்கள், காபி, தேயிலை உள்ளிட்டவையும் அதிகம் ஏற்றுமதி ஆகியுள்ளது.

எண்ணெய் வித்துக்கள், முந்திரி ஆகியவற்றில் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவை கடந்த மார்ச்சில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.

மூலக்கதை