உலகின் பெரும் மோசடிக்காரர் அமெரிக்க சிறையில் மரணம்

தினமலர்  தினமலர்
உலகின் பெரும் மோசடிக்காரர் அமெரிக்க சிறையில் மரணம்

புதுடில்லி:உலகிலேயே மிகப் பெரிய அளவில் பண மோசடி செய்து மாட்டிக் கொண்ட, பெர்னார்டு லாரன்ஸ் மடோப் என்பவர் அமெரிக்க சிறையில், கடந்த, 14ம் தேதி அன்று இறந்து போனார். அவருக்கு வயது, 82.

அமெரிக்காவிலுள்ள நாஸ்டாக் பங்குச் சந்தையின் செயல்சாரா தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்தவர் இவர்.‘போன்ஸி’ எனும் மோசடி திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கானோர் அவரிடம் ஏமாந்து போயினர். சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், 4.60 லட்சம் கோடி ரூபாய் மோசடியின் சூத்ரதாரி இவர்.இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்ட அவருக்கு, 2009ம் ஆண்டில், 150 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

கடைசியில் அவரிடமிருந்து , 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது.கடந்த, 1970 – 2000 வரையிலான காலத்தில், இந்த மோசடி திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த அவரின் இந்தத் திட்டம், மக்களை ஏமாற்றும் மிகப் பெரிய திட்டம் என, கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மோசடி அம்பலமாகி, கிட்டத்தட்ட, 11 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், பேரக் குழந்தைகளுடன் வீட்டிலிருந்தபடி இறக்க அனுமதிக்குமாறு கோரி இருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.கடந்த, 14ம் தேதி, சிறையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

மூலக்கதை