டிவி ரேட்டிங் - 'விஸ்வாசம்' சாதனையை முறியடிக்குமா 'மாஸ்டர்'?

தினமலர்  தினமலர்
டிவி ரேட்டிங்  விஸ்வாசம் சாதனையை முறியடிக்குமா மாஸ்டர்?

தமிழ் சினிமாவில் அதிக பரபரப்பை ஏற்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இவர்களது படங்கள் வெளிவந்தால் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு சண்டை நடந்து கொண்டே இருக்கும். 'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜித் நடித்து இன்னும் எந்தப் படமும் வெளிவரவில்லை.

விஜய்க்கு இந்த ஆண்டு பொங்கலுக்கு 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. இன்று(ஏப்., 14) டிவியில் 'மாஸ்டர்' படம் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அடுத்து வாரத்தில் இந்தப் படம் டிவி ரேட்டிங்கில் எவ்வளவு புள்ளிகளைப் பெற்றது என்பது காரசாரமான ஒரு விவாதமாக இருக்கப் போவது நிச்சயம்.

தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் தற்போதைய டிவி ரேட்டிங் சாதனையாக 'விஸ்வாசம்' படம் தான் இருக்கிறது. அப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக ஒளிபரப்பான போது 1,81,43,000 தடப்பதிவுகள் கிடைத்தது.

அந்த சாதனையை கடந்த வருடம் டிவியில் ஒளிபரப்பான 'பிகில்' படம் முறியடிக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், 'பிகில்' படம் 1,64,73,000 தடப்பதிவுகளை மட்டுமே பெற்றது. 'பிச்சைக்காரன், சர்க்கார், சீமராஜா' படங்கள் முறையே 2, 3, 4வது இடத்தில் உள்ள நிலையில் 'பிகில்' படம் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'மாஸ்டர்' படம் 'விஸ்வாசம்' டிவி ரேட்டிங் சாதனையை, இரண்டு வருடமாக இருக்கும் சாதனையை முறியடித்து அதிக ரேட்டிங்கைப் பெற்று முதலிடத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி என இரண்டு முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள். படம் தியேட்டர்களில் அதிக வசூலைப் பெற்ற ஒரு படம். அப்படியிருப்பதால் 'விஸ்வாசம்' டிவி ரேட்டிங் சாதனையை 'மாஸ்டர்' முறியடித்தால்தான் அதற்கும் பெருமை. என்ன நடக்கப் போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலக்கதை