சர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021

தினமலர்  தினமலர்
சர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021

 மும்பை: முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணிக்கு சர்க்கரையாய் இனித்தார் சக்காரியா.

குஜராத்தின் பாவ்நகரை சேர்ந்தவர் சேட்டன் சக்காரியா 23. ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ. 1.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பலரும் ரன்களை வாரி வழங்க, சக்காரியா மட்டும் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவரில் 31 ரன் கொடுத்து, 3 விக்கெட் சாய்த்தார். பூரன் அடித்த பந்தை அப்படியே அந்தரத்தில் பறந்து சென்று பிடித்து அசத்தினார்.

துவக்கத்தில் பேட்ஸ்மேனாக வர விரும்பினார். பின் வேகப்பந்து வீச்சிற்கு மாறினார். இவரது தந்தை லாரி டிரைவர். அடுத்தடுத்த விபத்துக்கள் காரணமாக தற்போது படுக்கையில் உள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப வருமானத்துக்கு சக்காரியா உதவியாக உள்ளார்.

சமீபத்திய சையது முஷ்தாக் அலி தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர்களில் ஆறாவது பவுலர் ஆனார். இத்தொடரின் போது, சக்காரியா தம்பி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 10 நாட்களாக சக்காரியாவிடம் பெற்றோர் தெரிவிக்கவில்லை.

இதனிடையே சக்காரியா அம்மா கூறியது:

சகோதரர் இறந்தது தெரிந்தால், சக்காரியா பவுலிங் திறன் பாதிக்கப்படும் என்பதால் கூறவில்லை. ஏனெனில் சக்காரியாவுக்கு தம்பியை அதிகம் பிடிக்கும். ஒவ்வொரு முறை அலைபேசியில் பேசும் போதும், தந்தை உடல்நலன் குறித்து விசாரிப்பார். பின் சகோதரரிடம் பேச வேண்டும் என்பார். நாங்கள் சகாரியா கவனத்தை வேறு திசையில் திருப்பி விடுவோம். 10 நாட்களுக்குப் பின் தெரியவந்த போது, சக்காரியா யாரிடமும் பேசவில்லை.

வருமான ரீதியில் சிரமப்பட்ட எங்களுக்கு ஐ.பி.எல்., ஒப்பந்தம் கிடைத்தது, கனவு போல இருந்தது. எங்களது காயங்களுக்கு மருந்தாக அமைந்தது. ராஜஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது முதல் தினமும் காலையில் இருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்பு வந்து கொண்ட இருக்கும். எனது மகன் இதற்காகத் தான் கடுமையாக போராடினான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியை இந்திய அணி முன்னாள் வீரர் சேவக், தனது ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

மூலக்கதை