கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ்

தினமலர்  தினமலர்
கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ்

புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ஏற்படக்கூடும் என, அஞ்சப்படும் நிலையில், இதற்கு நேர்மாறாக, ‘மூடிஸ்’ நிறுவனம், நடப்பு ஆண்டில், இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்குக்கு பதிலாக, அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் தனிமைப் படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், 2020ம் ஆண்டில் இருந்தது போன்ற பெரிய பொருளாதார பாதிப்புகளுக்கு வாய்ப்பிருக்காது என, மூடிஸ் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் இறப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அதிகளவிலான இளைஞர்களை கொண்ட நாடாகவும் இருக்கிறது. இது, அதிக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவுவதாக இருக்கிறது.

எனவே, 2021ல், இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இந்தியா, 13.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என, கடந்த பிப்ரவரியில் கணித்து தெரிவித்திருந்தது.மேலும், நடப்பு, 2021ம் ஆண்டில், வளர்ச்சி, 12 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை