மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டைவிட அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி., சுங்க வரி, கலால் வரி உள்ளிட்ட மறைமுக வரி வசூல், கடந்த நிதியாண்டில், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய, 2019 – 20ம் நிதியாண்டில் வசூல், 9.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

0கடந்த நிதியாண்டில், நிகர மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 5.48 லட்சம் கோடி ரூபாயாகும். சுங்க வரி வகையில், 1.32 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மேலும், மத்திய கலால் மற்றும் சேவை வரி வசூல், 3.19 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஜி.எஸ்.டி., வசூலை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் முதல் பாதியில், கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இருப்பினும், இரண்டாவது பாதியில் மீட்சி ஏற்பட்டது.இரண்டாவது பாதியில், ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிக்க துவங்கி, ஆறு மாதங்களும், தலா, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தொடர்ந்து வசூல் ஆனது.

நிதியாண்டின் இறுதி மாதமான, கடந்த மார்ச் மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், 1.24 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்தது.அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவது எளிதானதாகி உள்ளது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை