இந்திய அணி 365 ரன்கள்: வாஷிங்டன் சுந்தர் அபாரம் | மார்ச் 06, 2021

தினமலர்  தினமலர்
இந்திய அணி 365 ரன்கள்: வாஷிங்டன் சுந்தர் அபாரம் | மார்ச் 06, 2021

ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் அசத்திய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியது.

 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என, முன்னிலையில் இருந்தது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூன்றாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஜோடி நம்பிக்கை அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எட்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது அக்சர் படேல் (43) ‘ரன்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா (0), முகமது சிராஜ் (0), பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டாகினர்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வாஷிங்டன் சுந்தர் (96) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

பின், 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் தொல்லை தந்தார். அஷ்வின் ‘சுழலில்’ ஜாக் கிராலே (5), ஜானி பேர்ஸ்டோவ் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். அக்சர் படேல் பந்தில் டாம் சிப்லே (3), பென் ஸ்டோக்ஸ் (2), போப் (15) சரணடைந்தனர். நிதானமாக ஆடிய கேப்டன் ஜோ ரூட் (30), அஷ்வின் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய அக்சர் ‘சுழலில்’ பென் போக்ஸ் (13), டாம் பெஸ் (2) சிக்கினர். பொறுப்பாக ஆடிய டான் லாரன்ஸ் அரைசதமடித்தார். அஷ்வின் பந்தில் ஜாக் லீச் (2), லாரன்ஸ் (50) அவுட்டாகினர்.

 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. ஆண்டர்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின், அக்சர் படேல் தலா 5 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. தவிர, வரும் ஜூன் 18ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

 

மூலக்கதை