ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ் | மார்ச் 04, 2021

தினமலர்  தினமலர்
ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ் | மார்ச் 04, 2021

ஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில், கேப்டன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாச விண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை வீரர் அகிலா தனஞ்செயாவின் ‘ஹாட்ரிக்’ வீணானது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு தனுஷ்கா குணதிலகா (4) ஏமாற்றினார். நிரோஷன் டிக்வெல்லா (33), பதும் நிசங்கா (39) ஓரளவு கைகொடுத்தனர். தினேஷ் சண்டிமால் (11), கேப்டன் மாத்யூஸ் (5), திசாரா பெரேரா (1), டி சில்வா (12) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இலங்கை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.

தனஞ்செயா அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ், சிம்மின்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது அகிலா தனஞ்செயா வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் லீவிஸ் (28) சிக்கினார். அடுத்த இரு பந்தில் கிறிஸ் கெய்ல் (0), நிக்கோலஸ் பூரன் (0) அவுட்டாக, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார் தனஞ்செயா. மற்றொரு துவக்க வீரர் சிம்மன்ஸ் (26) நம்பிக்கை தந்தார்.

போலார்டு அபாரம்: அடுத்து வந்த கேப்டன் போலார்டு, தனஞ்செயா வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், 6 பந்தில், 6 சிக்சர் பறக்கவிட்டார். இவர், 11 பந்தில், 38 ரன் எடுத்து டி சில்வா பந்தில் ஆட்டமிழந்தார். பிரதீப் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜேசன் ஹோல்டர் வெற்றியை உறுதி செய்தார்.

விண்டீஸ் அணி 13.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோல்டர் (29), டுவைன் பிராவோ (4) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தனஞ்செயா, டி சில்வா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை போலார்டு வென்றார். விண்டீஸ் அணி 1–0 என, முன்னிலை பெற்றது.

 

அபாரமாக ஆடிய விண்டீசின் போலார்டு, இலங்கையின் அகிலா தனஞ்செயா வீசிய 4வது ஓவரில், 6 சிக்சர் விளாசினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், ஒரே ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்ட 2வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங், இச்சாதனை படைத்திருந்தார். இவர், 2007ல் டர்பனில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார்.

* சர்வதேச அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 3வது வீரரானார் போலார்டு. ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்துள்ளார். இவர், 2007ல் செயின்ட் கிட்சில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் நெதர்லாந்தின் வான் பங்க் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.

 

14வது ‘ஹாட்ரிக்’

இலங்கையின் அகிலா தனஞ்செயா, விண்டீசின் லீவிஸ், கெய்ல், பூரன் ஆகியோரை தொடர்ச்சியாக அவுட்டாக்கி முதன்முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இது, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் பதிவான 14வது ‘ஹாட்ரிக்’. தவிர இது, இலங்கை சார்பில் பதிவான 4வது ‘ஹாட்ரிக்’ விக்கெட். ஏற்கனவே இலங்கையின் திசாரா பெரேரா (2016), லசித் மலிங்கா (2017, 2019) இச்சாதனை படைத்திருந்தனர்.

மூலக்கதை