3வது டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: 6 விக்கெட் கைப்பற்றி ஏகார் அசத்தல்

தினகரன்  தினகரன்
3வது டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: 6 விக்கெட் கைப்பற்றி ஏகார் அசத்தல்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸி. அணியில் வேகப் பந்துவீச்சாளர் ரைலி மெரிடித் அறிமுகமானார். நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. மேத்யூ வேடு 5 ரன்னில் வெளியேறிய நிலையில், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 69 ரன் (44 பந்து, 71 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஷ் பிலிப் 43 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கிளென் மேக்ஸ்வெல் 70 ரன் (31 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். ஸ்டாய்னிஸ் 9, மிட்செல் மார்ஷ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சோதி 2, சவுத்தீ, போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 17.1 ஓவரில் 144 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கப்தில் 43 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கான்வே 38 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஆஷ்டன் ஏகார் 4 ஓவரில் 30 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மெரிடித் 2, ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 64 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஏகார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 4வது டி20 போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது.

மூலக்கதை