மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து இரு காலாண்டுகளாக, நாட்டின், ‘ஜி.டி.பி.,’ எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில், சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 24.4 சதவீதமாக சரிவைக் கண்டது. இதன் தொடர்ச்சியான பாதிப்பால், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 7.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.

இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கின. இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி துவங்கி உள்ளது.மத்திய புள்ளியியல் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இவ்வலுவலகம், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என கணித்து, ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய துறைகள்: நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில், 0.1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரியில், உரம், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை