ரிலையன்ஸ் – பியூச்சர் ஒப்பந்தம் உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’

தினமலர்  தினமலர்
ரிலையன்ஸ் – பியூச்சர் ஒப்பந்தம் உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’

புதுடில்லி : ரிலையன்ஸ் – பியூச்சர் குழுமத்திற்கு எதிராக, அமேசான் தொடர்ந்த வழக்கில், பியூச்சர் ரீடெய்ல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்ப்பு : முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், கிஷோர் பியானியின், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், 4.78 சதவீத பங்குகளை வைத்துள்ள, அமேசான் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அமேசான் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த மையம், ரிலையன்ஸ் ரீடெய்ல் – பியூச்சர் ரீடெய்ல் ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வர, தடை விதித்தது.

இதை எதிர்த்து, பியூச்சர் குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, ‘ஒப்பந்த அமலாக்கம் தொடர்பான தடை தொடரும்’ என, இம்மாத துவக்கத்தில் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு : இதையடுத்து, பியூச்சர் குழுமம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மூல வழக்கின் தீர்ப்பை பொறுத்து, ஒப்பந்தத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அமேசான் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி, ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், மூல வழக்கு விசாரணை தொடர்வதற்கு அனுமதி அளித்த அமர்வு, இறுதி முடிவு வரும் வரை ஒப்பந்தத்தில் குறுக்கிட மறுத்து விட்டது. மேலும், இது தொடர்பாக, மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு, பியூச்சர் ரீடெய்ல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு,‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

மூலக்கதை