மறக்க முடியுமா? - அவள் வருவாளா

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  அவள் வருவாளா

படம் : அவள் வருவாளா
வெளியான ஆண்டு : 1998
நடிகர்கள் : அஜித், சிம்ரன், ப்ரீத்விராஜ், சுஜாதா
இயக்கம் : ராஜ்கபூர்
தயாரிப்பு : வேங்கட அப்பாராவ்

கடந்த, 1980ல் வெளியான, மஞ்சு விரிச்ச பூக்கள் என்ற மலையாளப் படம் மற்றும் ஸ்லீப்பிங் வித் தி எனிமி என்ற, ஹாலிவுட் படம் இரண்டையும் அடிப்படையாக கொண்டு உருவானது, பெல்லி என்ற தெலுங்கு படம். இப்படத்தை, அவள் வருவாளா என, தமிழில், ரீமேக் செய்தனர்.

வங்கி மேலாளரான அஜித், முதல் பார்வையிலேயே சிம்ரனை காதலிக்கிறார். சிம்ரன் வசிக்கும் தெருவில், வாடகைக்கு வீடு பிடித்து தங்குகிறார். அஜித்தின் காதலை, சிம்ரன் ஏற்க மறுக்கிறார். ஏனெனில் அவருக்கு, ஏற்கனவே திருமணமாகி இருந்தது. கொடுமைக்கார கணவனான ப்ரீத்விராஜிடம் இருந்து தப்பித்து, இங்கு வசித்து வருகிறார். பலரின் வற்புறுத்தலுக்கு பின், அஜித்தை திருமணம் செய்துக் கொள்ள சிம்ரன் சம்மதிக்கிறார். இந்நிலையில் முதல் கணவன் ப்ரீத்விராஜ், அங்கு வர, என்ன நிகழ்கிறது என்பதை பரபரப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் காட்டியப் படம், அவள் வருவாளா.

இப்படத்தில் அஜித்திற்கு, அடக்கி வாசிக்க வேண்டிய கதாபாத்திரம். கதையின் நாயகியான சிம்ரனைச் சுற்றித் தான், படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. சிம்ரன், தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். வில்லத்தனத்தில், ப்ரீத்விராஜ் பிரமாதப்படுத்தினார். கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி கோஷ்டி, கிச்சு கிச்சு மூட்டியது.

பெல்லி தெலுங்கு படத்திற்கு இசையமைத்த, எஸ்.ஏ.ராஜ்குமார், அதே டியூனை, தமிழுக்கும் பயன்படுத்தினார். சிக்கிமுக்கி உய்யாலா, இது காதலின் சங்கீதம், காதல் என்ன கண்ணாமூச்சி, ஓ வந்தது பெண்ணா, ருக்கு ருக்கு ருக்குமணி, சேலையில வீடு கட்டவா... என, அனைத்து பாடல்களும் தாளம் போட செய்தன.

மாமியார், தாயாக மாறினால், அவள் வருவாளா!

மூலக்கதை