'மை ஸ்டாம்ப்' வடிவில் வரம்புமீறல்: ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
மை ஸ்டாம்ப் வடிவில் வரம்புமீறல்: ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர எதிர்பார்ப்பு

இந்தியாவில் மிகப்பெரிய துறையான தபால் துறை மூலம், 20 ஆண்டுகளுக்கு முன், தபால் தான் முக்கிய தகவல் பரிமாற்று சாதனமாக திகழ்ந்தது. ‘லேண்ட் லைன்’ என்பது பெரும்பாலான வீடுகளில் கிடையாது. பேஜர், மொபைல் போன் வருகையால், தபால் அனுப்புவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

இதற்கிடையே, ‘கூரியர்’ சேவையில், தனியார் நிறுவனங்கள் கால்பதிக்க துவங்கின. இருப்பினும், போட்டிகளை சமாளித்து, இன்றளவும் தபால் துறைக்கு என, தனியிடம் உள்ளது. தபாலில் ஒட்டப் பயன்படுத்தும், ‘ஸ்டாம்ப்’களில் தேசத்தலைவர்கள், விலங்குகள் உள்ளிட்ட படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.இதைப் பார்த்து பலருக்கும், தங்களது படமும் ஸ்டாம்பில் இடம் பெற்றால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக, ‘மை ஸ்டாம்ப்’ (எனது தபால் தலை) என்ற திட்டத்தை, தபால் துறை அறிமுகம் செய்தது.


திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்திய குடிமகனும், தங்களது புகைப்படம் இடம் பெற்ற, ‘ஸ்டாம்ப்’களை பெறலாம். தங்களது புகைப்படத்துடன், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, ஐந்து ரூபாய் மதிப்புடைய, விண்ணப்பித்தவர்களின் புகைப்படத்துடன் கூடிய, 12 ‘ஸ்டாம்ப்’கள் (60 ரூபாய்க்கு) வீட்டுக்கு அனுப்பப்படும்.


கோவை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேசமயம், தங்களது நிறுவனத்தை பெருமைப்படுத்தவும், அடையாளப்படுத்தவும் ‘மை ஸ்டாம்ப்’ பெறும் சில நிறுவனங்கள், இதனை வரவு ரீதியாக தவறாகவும் பயன்படுத்துகின்றன.

அதாவது, சில கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், புகைப்படத்துடன் கூடிய ஐந்து ரூபாய் விலையுள்ள தபால் தலை ஒன்றுக்கு, 50, 100 ரூபாய் என பெற்றோர், பணிபுரிவோரிடம் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில், இதன் வாயிலாக, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற வசூல் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட, ஜி.எஸ்.டி., (சரக்கு மற்றும் சேவை வரி) வரம்புக்குள் ‘மை ஸ்டாம்ப்’ கொண்டுவரப்பட வேண்டும் என்பது, பாதிக்கப்படுவோரின் எதிர்பார்ப்பு.


பொதுமக்கள், தொழில் துறையினர் வேண்டுகோளுக்கு இணங்க, பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., கட்டண குறைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.அதேசமயம், தனி மனித தேவைக்காக விண்ணப்பித்து பெறப்படும் ‘மை ஸ்டாம்ப்’ போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி., நிர்ணயித்து, பொது தேவைக்கான பொருட்களின் ஜி.எஸ்.டி.,யை குறைத்தால், சிரமமும் குறையும், அதேசமயம் அரசுக்கு வருவாயும் நிலையாக இருக்கும்.


தபால் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘லட்சணக்கணக்கில் செலவு செய்து ‘மை ஸ்டாம்ப்’ வாங்கும் நிறுவனங்களுக்கு, சில சமயங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘மை ஸ்டாம்ப்’ வாங்கும் நிறுவனங்கள் சில, பணம் பார்க்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண ‘மை ஸ்டாம்ப்’பை மட்டும் ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்,’ என்றார்.


ஜி.எஸ்.டி., கவுன்சில் கையில்!கோவை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், ‘பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவது, விலக்கு அளிப்பது, ஜி.எஸ்.டி., குறைப்பது போன்ற முடிவுகளை, ஜி.எஸ்.டி., கவுன்சில்தான் முடிவு எடுக்கும். எனவே, இதுபோன்ற கோரிக்கைகளை www.gstcouncil.gov.in என்ற இணையதளம் வாயிலாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்’ என்றார்.

மூலக்கதை