ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020

தினமலர்  தினமலர்
ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூருவுக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட், 51 பந்தில் 65 ரன்கள் குவித்து கைகொடுத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, கோஹ்லியின் பெங்களூருவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ேஹசல்வுட்டுக்குப் பதில் மோனு குமார், மிட்சல் சான்ட்னர் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் இசுரு உதனாவுக்குப் பதில் மொயீன் அலி இடம் பெற்றார்.

கோஹ்லி அரைசதம்

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல், பின்ச்  ஜோடி துவக்கம் கொடுத்தது. சகார் வீசிய முதல் ஓவரில் பின்ச், அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார். இவர் 15 ரன்னுக்கு கர்ரான் பந்தில் வீழ்ந்தார். படிக்கல் (22) சான்ட்னர் சுழலில் சிக்கினார். அடுத்து கோஹ்லி, டிவிலியர்ஸ் இணைந்தனர். பெங்களூரு அணி 15 ஓவரில் 101/2 ரன் என வலுவான நிலையில் இருந்தது. இதன் பின் ரன் வேகத்தை அதிகரிக்க முயன்ற டிவிலியர்ஸ் (39), சகாரிடம் சரிந்தார். மொயீன் அலி (1) வந்த வேகத்தில் வெளியேறினார். 

கோஹ்லி, ஐ.பி.எல்., அரங்கில் 39வது அரைசதம் எட்டினார். இவர் 50 ரன்னுக்கு அவுட்டானார். கிறிஸ் மோரிசும் (2) கைகொடுக்கவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்தது. சென்னை சார்பில் சாம் கர்ரான் 3, சகார் 2 விக்கெட் சாய்த்தனர்.

நல்ல துவக்கம்

எளிய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு டுபிளசி, ருதுராஜ் கெய்க்வாட்  ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சுந்தர் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டும் எடுத்தது சென்னை. மோரிஸ் வீசிய அடுத்த ஓவரில் டுபிளசி, அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்தார். கெய்க்வாட் தன் பங்கிற்கு சுந்தர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இந்நிலையில் மோரிஸ் ‘வேகத்தில்’ டுபிளசி (25) அவுட்டானார்.

ருதுராஜ் அபாரம்

கெய்க்வாட், அம்பதி ராயுடு இணைந்தனர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, சென்னை அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. சகால் பந்தில் பவுண்டரி அடித்த கெய்க்வாட், மொயீன் அலி பந்தில் சிக்சர்  விளாசினார். இவருக்கு கைகொடுத்த ராயுடு, நவ்தீப் சைனி ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். சென்னை அணி 12 ஓவரில் 105/1 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது. 

இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது ராயுடு (39) அவுட்டானார். தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த இளம் வீரர் கெய்க்வாட், ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். தோனி, மோரிஸ் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ருதுராஜ், மோரிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் (51 பந்தில் 65 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

பச்சை நிறமே... பச்சை நிறமே

பெங்களூரு அணியினர் கடந்த 2011 முதல் ஐ.பி.எல்., தொடரின் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற  சீருடையுடன்  களமிறங்குவர்.  ‘கோ கிரீன்’ திட்டப்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் நடுவதை  ஊக்குவிப்பது, எதிர்காலத்தில் இந்த உலகம் சந்திக்க உள்ள மோசமான புவி வெப்பமயமாதல் பிரச்னை  குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோல செயல்படுகின்றனர். இந்த வரிசையில் சென்னை  அணிக்கு எதிராக பச்சை நிற சீருடை அணிந்து விளையாடினர்.

*  பெங்களூரு அணிக்கு இந்த சீருடை ராசியில்லாமல் உள்ளது. இதுவரை பச்சை நிறத்தில் களமிறங்கிய 10 போட்டிகளில் 2ல் மட்டும் தான் (2011, 2016) வென்றது. மீதமுள்ள 7 போட்டியில் தோற்றது. 1 போட்டிக்கு (2015) முடிவில்லை

 

நெருங்கிய நண்பர்

தோனியின் ராஞ்சியை சேர்ந்தவர் மோனு குமார் சிங் 25. வேகப்பந்து வீச்சாளர். 19 வயது உலக  கோப்பைக்கான 2014 இந்திய அணியில் இடம் பெற்றவர்.  2018 ஏலத்தில் சென்னை அணிக்காக  அடிப்படைத் தொகை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். தோனியின் நெருங்கிய நண்பர். இன்று சென்னை அணிக்காக முதல் போட்டியில் பங்கேற்றார். 


சைனி காயம்

பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப்  சைனி. 18 வது ஓவரின் கடைசி பந்தை 144  கி.மீ., வேகத்தில் வீசினார். இதில் தோனி அடித்த பந்தை பிடிக்க முயன்ற போது வலது கை பெருவிரல்  அருகே காயம் ஏற்பட, மைதானத்தை விட்டு வெளியேறினார். 

ஏற்கனவே ஐ தராபாத் அணியின் புவனேஷ்வர் குமார், டில்லியின் இஷாந்த் சர்மா காயத்தால் விலகினர்.  தற்போது சைனியும் காயமடைந்தார். இதனால் அடுத்த ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின்  வேகப்பந்து வீச்சிற்கு சிக்கல் ஏற்படலாம்.

 

415

இன்று 50 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, 13வது சீசனில் அதிக ரன்கள் எடுத்த  வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இவர் 11 போட்டியில் 415 ரன்  எடுத்துள்ளார். முதல் இரு இடத்தில் பஞ்சாப் அணியின் ராகுல் (567 ரன்), டில்லியின் தவான் (471)  உள்ளனர்.

மூலக்கதை