இதயம் பலவீனமானவர்களுக்கு: பிரித்தி ஜிந்தா எச்சரிக்கை | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
இதயம் பலவீனமானவர்களுக்கு: பிரித்தி ஜிந்தா எச்சரிக்கை | அக்டோபர் 16, 2020

சார்ஜா: பஞ்சாப்–பெங்களூரு மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘டென்ஷன்’எகிறியது. பஞ்சாப் எளிதாக வெல்ல வாய்ப்பு இருந்தும், கடைசி ஓவர் வரை போட்டி செல்ல... ரசிகர்கள் பதட்டமடைந்தனர். கடைசி பந்தில் பூரன் சிக்சர் அடிக்க, பஞ்சாப் நிம்மதி பெருமூச்சுடன் வெற்றியை வசப்படுத்தியது.

இது குறித்து பஞ்சாப் அணி சக உரிமையாளர் நடிகை பிரித்தி ஜிந்தா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ஒருவழியாக மிகவும் அவசியமான வெற்றியை பெற்று இருக்கிறோம். கிரிக்கெட் என்ற பெயரில் எங்கள் அணியினர் மக்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ஏற்படுத்தக் கூடாது என விரும்புகிறேன். பஞ்சாப் சிங்கங்கள் விளையாடும் போட்டிகள் பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானது அல்ல  என எச்சரிக்கிறேன். இப்போட்டியில் கடைசி வரை போராடிய பெங்களூரு அணி பவுலர்களுக்கு பாராட்டு,’என தெரிவித்துள்ளார்.

பதட்டமா எனக்கா: இப்போட்டியில் பஞ்சாப் சார்பில் துவக்கத்தில் அல்லாமல், மூன்றாவது வீரராக வந்தார் கெய்ல். 45 பந்தில் 53 ரன்கள் விளாசி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.  இவர் கூறுகையில்,‘‘எனது செல்லப் பெயரான ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்பதற்கு கொஞ்சம் மதிப்பு அளிக்க வேண்டும். இதற்காகவே அரைசதம் எட்டியதும்  பேட்டில் இருந்த ‘தி பாஸ்’ என்ற வாசகத்தை சுட்டிக்காட்டினேன். போட்டியில் பதட்டமாக உணரவில்லை. ‘யுனிவர்ஸ் பாஸ்’ பேட் செய்யும் போது, எப்படி பதட்டமாக இருக்கும். ரசிகர்களுக்கு தான் ‘ஹார்ட் அட்டாக்’வரும் நிலையை ஏற்படுத்துவேன். கிரிக்கெட்டில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது சகஜம் தான். உடற்தகுதியை தக்க வைத்து ‘பிட்’ ஆக இருக்க விரும்புகிறேன்,’’என்றார்.

 

பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில்,‘‘வாய்ப்பு வழங்காததால், பசி கொண்ட சிங்கம் போல காத்திருந்தார் கெய்ல். ‘பேட்டிங்’ வரிசையில் எந்த இடத்திலும் விளையாடினாலும் ஆபத்தானவர் தான். பெங்களூரு அணிக்கு எதிராக  மூன்றாவது வீரராக  களமிறக்குவது என்ற கடினமான முடிவை எடுத்தோம். சவாலை ஏற்று சிறப்பாக ரன் சேர்த்தார்,’’என்றார்.

மூலக்கதை