ஆறு மாதங்களில் முதன்முறையாக செப்டம்பரில் ஏற்றுமதி அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஆறு மாதங்களில் முதன்முறையாக செப்டம்பரில் ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆறு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், செப்டம்பரில், 5.99 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2,758 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 2.01 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.


மருந்து பொருட்கள், ஆயத்த ஆடைகள் இரும்புத் தாது ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி ஆனது இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.கடந்த ஆண்டு செப்டம்பரில், ஏற்றுமதி 2,602 கோடி டாலராக இருந்தது. இதன் மதிப்பு, 1.90 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இறக்குமதியை பொறுத்தவரை, செப்டம்பரில், 19.6 சதவீதம் குறைந்து, 2.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை, 19 ஆயிரத்து, 856 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை, இதே மாதத்தில், 85 ஆயிரத்து, 191 கோடி ரூபாயாக இருந்தது.தங்கத்தைப் பொறுத்தவரை, செப்டம்பரில் இறக்குமதி, 53 சதவீதம் குறைந்து, 4,390 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.


மதிப்பீட்டு மாதத்தில், இரும்புத் தாது ஏற்றுமதி, 109.65 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல், ஆயத்த ஆடைகள், 10.22 சதவீதமும், மருந்துகள் 24.38 சதவீதமும், அரிசி 93.86 சதவீதமும் அதிகரித்துள்ளன.இருப்பினும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 24.67 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. எண்ணெய் இறக்குமதி, 35.88 சதவீதம் சரிந்துள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

மீண்டெழுந்தது ஆடைகள் ஏற்றுமதி

ஊரடங்கு தளர்வால், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட நாடுகளில், ஆடை வர்த்தகம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதனால், ஜூலை முதல், ஆடை ஏற்றுமதி வர்த்தகம், சரிவிலிருந்து மீளத்துவங்கியது. நடப்பு நிதியாண்டின் செப்., மாதம், 8,745.34 கோடியாக, வளர்ச்சி கண்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘பீனிக்ஸ் பறவை போன்று, நெருக்கடி நிலையிலிருந்து, ஆயத்த ஆடை துறை மீண்டெழுவதற்கு உறுதுணையாக இருந்த, மத்திய அரசுக்கு நன்றி.


அடுத்த அரையாண்டில், நாட்டின் ஆடை ஏற்றுமதி மேலும் வளர்ச்சி அடைய, தொழில் துறையினர் முழுவீச்சில் செயல்படவேண்டும்,’’ என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ‘‘கொரோனாவால் சரிவடைந்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தற்போது, மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திருப்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘‘வங்கி கடன், சலுகைகள் கால நீட்டிப்பு என, தொழில் துறையின் எதிர்பார்ப்புகளை அரசு நிறைவேற்றி வைத்துள்ளது,’’ என்றார்.

மூலக்கதை