ஜவுளிக்கும் ஆர்கானிக் சான்றிதழ் திட்டமிடுகிறது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
ஜவுளிக்கும் ஆர்கானிக் சான்றிதழ் திட்டமிடுகிறது மத்திய அரசு

புதுடில்லி:ஜவுளி, அழகுசாதன பொருட்கள், உடல் நலம் சம்பந்தமான பொருட்கள் போன்றவற்றுக்கும் என்.பி.ஓ.பி., ஆர்கானிக் சான்றிதழ் வழங்க அரசு திட்டமிடுகிறது.

ரசாயனம் சேராத வகையில் தயாரிக்கப்படும், ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும், என்.பி.ஓ.பி., ஆர்கானிக் சான்றிதழை மேலும் சில பொருட்களுக்கு வழங்க அரசு திட்டமிடுகிறது.ஜவுளி, அழகுசாதன பொருட்கள், ஆயுர்வேதம்,யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்றவற்றுக்கு, என்.பி.ஓ.பி., எனும், இயற்கை உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் கீழ் ஆர்கானிக் சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

என்.பி.ஓ.பி., திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆர்கானிக் சான்றிதழ் திட்டமாகும்.2006ல் இந்த என்.பி.ஓ.பி., திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அங்கீகரித்தன. தற்போது இந்த பட்டியலில் அமெரிக்காவும் உள்ளது.இதனையடுத்து, இந்நாடுகளுக்கு மறு சான்றிதழ் எதுவும் தேவையில்லாமல், இந்தியாவிலிருந்து ஆர்கானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், கனடா, ஜப்பான், கொரியா, தைவான் உள்ளிட நாடுகளும் இத்திட்டத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை