இந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019

 ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3–0 என முழுமையாக வென்றது.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடந்தது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் (‘டிக்ளேர்’), தென் ஆப்ரிக்கா 162 ரன்கள் எடுத்தன. ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணி, மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ், 203 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. டி புருய்ன் (30), நார்ட்ஜே 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். 

சபாஷ் ஷாபாஸ்

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். இதில் உதிரியாக ஒரு ரன் கிடைத்தது. இரண்டாவது ஓவரில் ஷாபாஸ் நதீம் பந்தை சுழற்றினார். முதல் நான்கு பந்தில் தடுமாறிய புருய்ன் (30), 5வது பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் ‘பிடி’ கொடுத்து வெளியேறினார். அடுத்து நார்ட்ஜேயுடன் இணைந்தார் லுங்கிடி. 

வந்த வேகத்தில் முதல் பந்தை வேகமாக விளாசினார் லுங்கிடி (0). பந்து எதிர்முனையில் இருந்த நார்ட்ஜே கையில் பட்டு எகிறியது. இதை அருகில் இருந்த நதீம் ‘கேட்ச்’ செய்ய, தென் ஆப்ரிக்க அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இன்று போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்க அணி கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து, 133 ரன்னுக்கு சுருண்டது. 

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் வென்று கோப்பை கைப்பற்றியது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், நதீம் தலா 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 


சொந்தமண்ணில் இந்திய அணியை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. கடைசியாக பங்கேற்ற 32 டெஸ்டில் 26ல் வென்றது. 5 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. ஒன்றில் மட்டும் தோற்றது. இதில் 6 விக்., அல்லது 75 ரன்னில் வென்றது தான் குறைந்தபட்ச வெற்றி. அந்தளவுக்கு இந்திய அணி ஆதிக்கம் தொடர்கிறது. 

 

26

கடந்த முறை தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்த போது ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்ததாக கூறப்பட்டது. இம்முறை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எழுச்சி பெற்றனர்.மொத்தம் வீழ்ந்த 60 விக்கெட்டுகளில் 26 ஐ ‘வேகங்கள்’ கைப்பற்றினர். சுழலில் 32 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 2 ரன் அவுட்.

 

65

இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய டெஸ்ட் தொடரில் மொத்தம் 65 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இந்தியா 47 சிக்சர் அடித்தது. டெஸ்ட் தொடரில் ஒரு அணி சார்பில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள் இது தான். 

* இந்தியாவின் ரோகித் சர்மா, அதிகபட்சம் 19 சிக்சர் அடித்து சாதித்தார்.

* தென் ஆப்ரிக்காவின் பீட் பந்துகளில் அதிகபட்சம் 20 முறை சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ச

 

240

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முதலில் விண்டீசை (2–0) வீழ்த்தி 120 புள்ளிகள் பெற்றது. தற்போது தென் ஆப்ரிக்காவை முழுமையாக வெல்ல (3–0) கூடுதலாக 120 புள்ளிகள் கிடைத்தன. மொத்தமாக 240 புள்ளிகளுடன், பட்டியலில் ‘நம்பர்–1’ அணியாக நீடிக்கிறது. நியூசிலாந்து (60), இலங்கை (60) அடுத்த இரு இடத்தில் உள்ளன. 

 

869

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய துவக்க வீரர்கள் அதிக ரன்கள் எடுத்தது இம்முறை தான். ரோகித் (529), மயங்க் (340)அகர்வால் மொத்தம் 869 ரன்கள் எடுத்தனர். 2009, இலங்கை தொடரில் இதற்கு முன் 860 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.

மூலக்கதை