இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா: ஷமி, உமேஷ் அபார பந்துவீச்சு | அக்டோபர் 21, 2019

தினமலர்  தினமலர்
இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா: ஷமி, உமேஷ் அபார பந்துவீச்சு | அக்டோபர் 21, 2019

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் ‘நெருப்பாக’ உமேஷ் யாதவ், முகமது ஷமி ‘வேகத்தில்’ மிரட்ட, இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி சிறப்பாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணி மீண்டும் ஏமாற்றியது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 

உமேஷ் நம்பிக்கை: மூன்றாவது நாள் ஆட்டத்தில் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டுபிளசி (1) போல்டானார். பின் பவுமாவுடன் இணைந்த ஹம்ஜா ஒருநாள் போட்டி போல வேகமாக ரன்கள் சேர்த்தார். அஷ்வின் பந்தை சிக்சருக்கு விரட்டிய இவர், டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். 

ஜடேஜா கலக்கல்: இவர் 62 ரன் எடுத்த போது, ஜடேஜா சுழலில் போல்டானார். அறிமுக ‘சுழல்’ வீரர் நதீம், தனது 4வது ஓவரில் பவுமாவை (32) வெளியேற்றி அசத்தினார். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, கிளாசனையும் (6) போல்டாக்கினார். பீட் (4) முகமது ஷமியிடம் சரிந்தார். ரபாடா (0), உமேஷ் யாதவின் துல்லிய ‘த்ரோவில்’ ரன் அவுட்டானார். 

ஜார்ஜ் (37), கடைசியில் நார்ட்ஜே (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

‘பாலோ ஆன்’ சோகம்: 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

 மாறாக தென் ஆப்ரிக்க வீரர்கள் மீண்டும் வருவதும் போவதுமாக இருந்தனர். குயின்டன் டி காக் (5), ஹம்ஜா (0), டுபிளசி (4), பவுமா (0) என வரிசையாக கிளம்பினர். எல்கர் (16) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். கிளாசன் (5), ஜார்ஜ் (27), பீட் (23) ஏமாற்றினர். ரபாடா 12 ரன் எடுத்தார். 

தென் ஆப்ரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 203 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்தியா சார்பில் ஷமி 3, உமேஷ் யாதவ் 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

நேற்று அஷ்வின் வீசிய போட்டியின் 26.1 வது ஓவரில், பந்தை பிடிக்க முயன்றார் விக்கெட் கீப்பர் சகா. இது சகாவின் இடது கை பெருவிரலில் தாக்கியது. வலியால் துடித்த சகாவுக்குப் பதில் ரிஷாப் பன்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார். 

 

6 இன்னிங்ஸ்

சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் தொடர்ந்து 6 இன்னிங்சில் (6, 4, 3, 3, 3, 3) 3 அல்லது அதற்கு மேல் என விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் உமேஷ் யாதவ். 

 

8வது முறை

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் 8வது முறையாக எதிரணிக்கு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இதற்கு முந்தைய 7ல் இந்திய அணி 5 டெஸ்டில் வென்றது. வங்கதேசம் (2015), ஆஸ்திரேலியா (2019) அணிக்கு எதிரான 2 டெஸ்ட் ‘டிரா’ ஆகின. 

* இந்திய அளவில் அதிகமுறை ‘பாலோ ஆன்’ கொடுத்த கேப்டன்களில் கோஹ்லி (8) முதலிடம் பிடித்தார். இதற்கு முன் முகமது அசார் 7, தோனி 5, கங்குலி 4 முறை இதுபோல எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 

 

16 விக்கெட்டுகள்

நேற்று ஒரே நாளில் மட்டும் தென் ஆப்ரிக்காவின் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதற்கு முன் 2018ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், 2வது நாளில் இந்தியா 20 விக்கெட்டுகளை ஒரே நாளில் வீழ்த்தி இருந்தது. 

 

335 ரன்கள்

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் முன்னிலை பெற்ற போட்டி வரிசையில் ராஞ்சி டெஸ்ட் இரண்டாவது இடம் (335 ரன்) பெற்றது. முதலிடத்தில் கோல்கட்டா டெஸ்ட் (347, 2009–10) உள்ளது.

மூலக்கதை