காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல்

தினமலர்  தினமலர்
காமெடி நடிகருக்காக உருவாக்கப்பட்ட பாகுபலி ஸ்டைல் பாடல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிஜுமேனன் நடித்த வெள்ளிமூங்கா என்கிற சூப்பர்ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜிபு ஜேக்கப். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.. இந்த நிலையில் மீண்டும் பிஜுமேனன் மற்றும் காமெடி நடிகர் அசு வர்கீஸ் என தனது முதல் படமான வெள்ளிமூங்கா கூட்டணியுடன் ஆத்யராத்திரி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜிபு ஜேக்கப். இந்த படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் அஜூ வர்கீஸுக்காக இந்த படத்தில் பாகுபலி பட பாணியில் ஒரு காதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.. பாகுபலி படத்தில் அனுஷ்காவை கைது செய்து தனது நாட்டிற்கு பிரபாஸ் அழைத்துக் கொண்டு வரும்போது கடலில், படகில் நடப்பது போன்ற ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருக்கும்.

அதே பாணியில் ஒரு பாடல் காட்சியை மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இந்த படத்தில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.. கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட பாகுபலி பாடல் காட்சியை இப்படி குறைந்த பட்ஜெட்டில் எடுப்பது என்றால், அது மலையாள திரையுலகினரால் மட்டுமே முடியும் என்று சில ரசிகர்கள் கிண்டல் செய்யவும் தவறவில்லை.

மூலக்கதை