உணவு பொருட்கள் விற்பனையில் ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் இறங்குகிறது

தினமலர்  தினமலர்
உணவு பொருட்கள் விற்பனையில் ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் இறங்குகிறது

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது. இதற்காக, தனியாக புதிய நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனைக்காக, ‘பிளிப்கார்ட் பார்மர்மார்ட்’ எனும் தனி நிறுவனம் ஒன்றை, துவக்கி பதிவு செய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.இந்த புதிய நிறுவனம், தனியாக உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனைக்கான உரிமம் கோரி விண்ணப்பிக்க தயாராகி வருகிறது.


இந்த சில்லரை விலை விற்பனை, ‘ஆன்லைன்’ மூலமாகவும், ‘ஸ்டோர்’கள் மூலமாகவும் செய்யப்படும் என தெரிகிறது.இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம், 1,845 கோடி ரூபாய் என, நிறுவன பதிவாளர் அலுவலகத்துக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.



கடந்த மாதம், சிங்கப்பூரில் நடைபெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த புதிய நிறுவனத்தை துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.


மேலும், இந்த சில்லரை விற்பனைக்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளை, இந்தியா முழுவதும் அமைக்கும் முயற்சிகளிலும் இறங்க உள்ளது, பிளிப்கார்ட்.

மூலக்கதை