இந்திய பெண்கள் ‘ஹாட்ரிக்’ வெற்றி | அக்டோபர் 14, 2019

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் ‘ஹாட்ரிக்’ வெற்றி | அக்டோபர் 14, 2019

வதோதரா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 3–0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்த தென் ஆப்ரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய பெண்கள் அணி 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு பிரியா பூனியா (0), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3) மோசமான துவக்கம் தந்தனர். பூணம் ராத் (15), கேப்டன் மிதாலி ராஜ் (11) நிலைக்கவில்லை. தீப்தி சர்மா (7), தனியா பாட்யா (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் (38), ஷிகா பாண்டே (35) ஆறுதல் தந்தனர்.

இந்திய பெண்கள் அணி 45.5 ஓவரில், 146 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு லிசெல் லீ (13), திரிஷா செட்டி (7), மிக்னன் டு பிரீஸ் (10), லாரா குட்டால் (6) ஏமாற்றினர். லாரா வால்வார்ட் (23), கேப்டன் சுனே லுாஸ் (24), மரிஜானே காப் (29) ஆறுதல் தந்தனர்.

தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 48 ஓவரில், 140 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் எக்தா பிஷ்ட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை