23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்?..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்?..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை சீரமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும், வாரியத்தை நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது.

லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிசிசிஐ உறுப்பினர்கள் அனைவரும் நேற்று மும்பையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் முறைசாரா கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என். நிவாசன், குஜராத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில், பல மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

நீண்ட இழுபறிக்கு பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை, தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் (தற்ேபாது குஜராத் சங்கத்துக்கு துணை தலைவராக உள்ளார்), முன்னாள் தலைவரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரருமான அருண் துமால் பொருளாளர் பதவிக்கும் முன்னிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த 3 முக்கியமான பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்றும், ஸ்ரீநிவாசன் முன்னிறுத்திய பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நேற்றுமுன்தினம் என். சீனிவாசன், கங்குலி ஆகியோர் தனித்தனியாக சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடைபெற உள்ள பிசிசிஐ ஆண்டு கூட்டத்தில் தமிழ்நாடு, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 கிரிக்கெட் சங்கம் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து இவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை