முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்?

தினமலர்  தினமலர்
முயற்சிகளின் முடிவு எப்படிஇருக்கும்?

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவது அனைவராலும் ஏற்கபட்ட ஒன்று. வளரும் நாடுகளின் வளர்ச்சியும், வளர்ந்த நாடுகளின் வளர்ச்சியும் ஒரே விதமான பாதிப்பை சந்திக்கின்ற சூழல் நிலவுகிறதா?

வளர்ந்த நாடுகளில், அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் வளர்ச்சி பெரும் சவாலாகவே, சமீப ஆண்டுகளில் இருந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம், சமீப காலம் வரை நல்ல, சீரான வளர்ச்சி கண்டது.வேலையின்மை, வளர்ச்சி, பண வீக்கம் ஆகிய மூன்று முக்கிய குறியீடுகளிலும் அமெரிக்க பொருளாதாரம் நன்றாகவே இயங்கி வந்தது.


சவால்


அவற்றில் எந்தவித சர்ச்சையோ, சிக்கலோ, கவலைகளோ இன்றி, அமெரிக்க பொருளாதாரம், கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்தது.ஆனால், ஐரோப்பிய நாடுகளில் பல சிக்கல்கள், தொடர்ந்து வளர்ச்சிக்கு சவாலாக அமைந்தன.அதிக வளர்ச்சி கண்டு வந்த நாடுகளான சீனா வும், இந்தியாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பெரும் சவால்களை எதிர் கொண்டன. அமெரிக்கா வளர்ச்சி கண்ட காலகட்டத்தில், இரு நாடுகளும் குறையும் வளர்ச்சி விகிதங்களை எதிர்கொண்டன.


இந்த எதிர்மறையான வளர்ச்சி சூழலை எதிர்கொள்ள, இரு நாடுகளும் தவிக்கின்றன. அமெரிக்க பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடையாத சூழலில், இந்தியாவும், சீனாவும் அதிக பொருளாதார வளர்ச்சி கண்டன என்பது தான் முக்கிய பொருளாதார முரண்.வளர்ச்சியை மீண்டும் அதிகப்படுத்தி, பழைய உச்சத்தை அடைய, இரு நாடுகளும் முயற்சி செய்தாலும், அந்த முயற்சி பல தடைகளை சந்திப்பதே உண்மை.


அமெரிக்கா தன்னோடு வர்த்தகம் செய்யும் நாடுகளிடம், அதிக சலுகைகளையும், சந்தை வாய்ப்புகளையும் எதிர்பார்க்கிறது. அதை கொடுக்க, வளரும் நாடுகள் தயங்குவது ஒரு பக்கம் நடந்தாலும், வளரும் நாடுகளிடையே ஏற்பட்டு இருக்கும் சந்தை போட்டி சூழல், அமெரிக்காவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.போதுமான ஏற்றுமதி வளர்ச்சி இல்லாத சூழலில், உள்நாட்டு சந்தை வளர்ச்சியை மட்டுமே இரு நாடுகளும் நம்புகின்றன.
கடந்த இரு காலாண்டுகளாக, இரு நாடுகளும் நிதி கட்டமைப்பில் பல சவால்களை சந்திக்கும் சூழலில், உள்நாட்டு வளர்ச்சி குறைந்து விட்டது.

முயற்சி


இந்தியாவில் இதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், சீனாவும் பெரும் சிக்கலை சந்திப்பதே உண்மை. இரு நாடுகளின் வர்த்தக பேச்சுகளின் பொருளாதார பின்புலம் இது தான்.இரு நாட்டு பரஸ்பர வர்த்தகம் மூலம், வளர்ச்சி விகிதத்தை கூட்ட, இரு நாடுகளும் பேச்சு மூலம் முயற்சிக்கின்றன.


இந்த முயற்சிகள், இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சி அதிகரிக்க விரைவில் வழிவகுக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.ஒரு பக்கம், அமெரிக்காவுடன் இரு நாடுகளும் வர்த்தக பேச்சுகளை நடத்துகின்றன. இன்னொரு பக்கம், தங்களுக்கிடையே பேச்சு மூலம் வர்த்தக பந்தங்களை மீண்டும் வலுப்படுத்தி, அதிகரிக்க முயற்சிக்கின்றன.இந்த இரு முயற்சிகளின் முடிவு எப்படி அமைகிறது என்பதை, இந்திய முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

[email protected]

மூலக்கதை