கோஹ்லி ‘50’ * அசத்துமா இந்தியா | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லி ‘50’ * அசத்துமா இந்தியா | அக்டோபர் 09, 2019

 புனே: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் இன்று துவங்குகிறது. இது, கேப்டனாக கோஹ்லி களமிறங்கும் 50 வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று புனேயில் துவங்குகிறது.

இந்திய அணியில் புதிய துவக்க ஜோடியாக இணைந்துள்ள ரோகித் சர்மா முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசியதால், புதிய நம்பிக்கையுடன் இந்தியா களமிறங்குகிறது. இவரது ‘சகா’ மயங்க் அகர்வால், இரட்டைசதம் அடித்ததும் நல்ல விஷயம் தான்.

அடுத்து வரும் புஜாராவும் ‘பார்மிற்கு’ திரும்பியுள்ளார். ‘மிடில் ஆர்டரில்’ வரும் கோஹ்லி, கேப்டனாக தனது 50வது டெஸ்டில் இன்று களமிறங்குகிறார். இவருடன் ரகானே, ஹனுமா விஹாரி கூட்டணி சுதாரித்துக் கொள்ள வேண்டும். பின் வரிசையில் வரும் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, அஷ்வினும் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.

உதவுமா ‘சுழல்’

கடந்த 2017ல் இங்கு நடந்த டெஸ்டில் மொத்தம் வீழ்ந்த 40 விக்கெட்டுகளில் 31 ஐ சுழல் வீரர்கள் தான் வீழ்த்தினர். இது மீண்டும் தொடரும் பட்சத்தில் அஷ்வின், ஜடேஜா எழுச்சி பெறலாம். வேகத்தை பொறுத்தவரையில் இரண்டாவது இன்னிங்ஸ் ‘ஸ்பெஷலிஸ்ட்’ முகமது ஷமி விக்கெட் வேட்டை தொடரலாம். இஷாந்த் அதிகம் தடுமாறுவதால், உமேஷ் யாதவ் வருவாரா என பொறுத்திருந்து காணலாம்.

பேட்டிங் நம்பிக்கை

தென் ஆப்ரிக்க அணிக்கு பேட்டிங்கில் சதங்கள் விளாசிய எல்கர், குயின்டன் டி காக் இருவரும் மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கலாம். கேப்டன் டுபிளசி, மார்க்ரம் தங்கள் பங்கிற்கு ரன் உயர்வுக்கு உதவ வேண்டும். பவுமா, டிபுருய்ன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது ஏமாற்றம் தான்.

பவுலிங்கில் ரபாடாவுடன் லுங்கிடி சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதால், பிலாண்டர் இடம் பெறுவது சந்தேகம் தான். ஒருவேளை மூன்று வேகங்களுடன் களமிறங்கும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சில் தமிழக வம்சாவளி வீரர் முத்துச்சாமி, பீட் என இருவரில் ஒருவருக்கு இன்று இடம் கிடைக்காமல் போகலாம்.

 

அதிர்ஷ்டம்

இந்தியாவின் கோஹ்லி இன்று 50வது டெஸ்டில் கேப்டனாக களமிறங்குகிறார். இவரது கேப்டன் பணியில் இந்தியா பங்கேற்ற 49 டெஸ்டில் 29ல் வெற்றி பெற்றுத் தந்தார். 10 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 10 போட்டிகளில் தோல்வி கிடைத்தது.

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், ‘‘இப்படி ஒரு நிலைக்கு வர அதிர்ஷ்டம் தான் காரணம் என நினைக்கிறேன். முடிந்த வரை ஒவ்வொரு டெஸ்டிலும் வெற்றி பெறவே முயற்சிப்பேன். மற்றபடி புள்ளி விபரங்கள், எண்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல,’’ என்றார்.


இருமடங்கு புள்ளி

கோஹ்லி கூறுகையில்,‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் ஐ.சி.சி., மாற்றம் கொண்டு வர வேண்டும். இன்னிங்ஸ், 10 விக்கெட் மற்றும் 250 ரன்கள் வித்தியாசம் என பெரிய வெற்றிகள் பெறும் போது, போனஸ் புள்ளிகள் தர வேண்டும். இதுவே அன்னியமண் என்றால் இரண்டு மடங்காக இருந்தால் நல்லது,’’ என்றார்.

 

இடி, மழை

இரண்டாவது டெஸ்ட் நடக்கவுள்ள புனேயில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை தொல்லை தர காத்திருக்கிறது. முதல் நாளான இன்று பகல் இடியுடன் கூடிய மழை வர 60 சதவீதம் வாய்ப்புள்ளது.

 

ஆடுகளம் எப்படி

புனே ஆடுகளத்தில் புற்கள் காணப்படுகின்றன. இது அடுத்த ஐந்து நாட்களுக்கும் நீடிக்காது என்பதால் ‘வேகங்கள்’ முழு ஆதிக்கம் செலுத்த முடியாது.

மூலக்கதை