ரெப்போ அடிப்படையிலான கடன் கைவிட்டது எஸ்.பி.ஐ., வங்கி

தினமலர்  தினமலர்
ரெப்போ அடிப்படையிலான கடன் கைவிட்டது எஸ்.பி.ஐ., வங்கி

புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கி, கடந்த ஜூலை, 1ம் தேதியன்று அறிமுகம் செய்த, ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட, வீட்டுக் கடன் திட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக தெரிகிறது.

வாடிக்கையாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எஸ்.பி.ஐ., ரெப்பொ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட, ஆர்.எல்.எல்.ஆர்., அடிப்படையிலான வீட்டுக் கடன் திட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்து, கடன் வழங்குவதை முதலில் அறிவித்தது, எஸ்.பி.ஐ., தான். இதைத் தொடர்ந்து பல வங்கிகள், ஆர்.எல்.எல்.ஆர்., அடிப்படையிலான கடன் திட்டங்களை அறிமுகம் செய்தன. ஆனால், தற்போது இந்த திட்டத்தை, எஸ்.பி.ஐ., கைவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான கடன் திட்டம் தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்தன.இந்நிலையில், அக்டோபர், 1- முதல், அனைத்து வங்கிகளும், அனைத்து புதிய கடன்களையும் ரெப்போ விகிதத்துடன் இணைப்பது கட்டாயம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், அக்டோபர், 1ம் தேதிக்கு முன், எஸ்.பி.ஐ., ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அதன் புதிய கடன் திட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை