இந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி

சென்னை: இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் வகையில் ஜெர்மனி கால்பந்து நிறுவனத்துடன் இந்தியாவின் வேர்ல்டு1 ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.இந்தியாவில் விளையாட்டுத் துறையில் ஆலோசனை வழங்கி வரும் நிறுவனம் வேர்ல்டு1 ஸ்போர்ட்ஸ். இந்த நிறுவனம் மணிப்பூர், மிசோராம் மாநிலங்களில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தங்கள் பணியை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பியாவின் பழமையான போரஷ்யா டார்ட்மண்டு (பிவிபி) கால்பந்து கிளப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இந்த கால்பந்தாட்ட கிளப் 1909ம் ஆண்டு முதல்  செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் சாம்பியன், ஐரோப்பிய சாம்பியன் லீக் பட்டங்ளை வென்றுள்ள இந்த கிளப், இந்தியாவில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் பணியில் வேர்ல்டு1 ஸ்போர்ட்ஸ் நிறுனத்துடன் இணைந்து செயல்படும்.வேர்ல்டு1 நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் விக்ரம் ராஜ்குமார், பிவிபி ஆசிய பசிபிக் மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் லெட்சுமணன் ஆகியோர் நேற்று சென்னையில் அறிவித்தனர். இது குறித்து வேர்ல்டு1 நிறுவனத்தின்  இணை நிறுவனர் வருண் ஆச்ரெஜா பேசும்போது, ‘யு6, யு8, யு10, யு12 என வயது அடிப்படையில் 4 பிரிவுகளில் 600 சிறுவர்களை தேர்வு செய்து கால்பந்து பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான உதவித் தொகை  வழங்குகிறோம். சிறப்பான பயிற்சி அளிக்க ஜெர்மனி கிளப்புடன் இணைந்து செயல்பட உள்ளோம். அவர்கள் பயிற்சியாளர்களை தருகின்றனர். தமிழ்நாட்டில் பயிற்சியை தொடங்க தனியார் பள்ளி ஒன்றுடன் பேசி வருகிறோம்’ என்றார்.

மூலக்கதை