டிஎன்பிஎல் போட்டியில் முறைகேடு: சூதாட்டம் குறித்து பிசிசிஐ விசாரணை..சேர்மன் திடீர் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎல் போட்டியில் முறைகேடு: சூதாட்டம் குறித்து பிசிசிஐ விசாரணை..சேர்மன் திடீர் விளக்கம்

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டிகள் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆக. 15ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற வீரர்கள் பங்கேற்று ஆடினர். சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இப்போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதையடுத்து, பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது.

அதில், இந்திய வீரரும், ஐபிஎல் குழு உறுப்பினரும், ராஞ்சி தொடரின் பயிற்சியாளருமான ஒருவருமான தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் சேர்மன் பி. எஸ். ராமன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  2019 டிஎன்பில் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் விரும்புகிறது.

டிஎன்பிஎல் அமைப்பு, ஐசிஐசி மற்றும் பிசிசிஐ வகுத்துள்ள கடுமையான விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. டிஎன்பிஎல் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குட்பட்டு சூதாட்டம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது குறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் குழு அமைக்கபட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த புகார் தொடர்பாக டிஎன்சிஏ சார்பில் அணிகள் தொடர்பாகவும், வீரர்கள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும், சட்டத்திட்டங்களுக்கு எதிராக நெறிமுறைகளுக்கு முரணாண வகையில் யார் செயல்பட்டிருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை