மொத்தவிலை பணவீக்கத்தில் மாற்றமில்லை

தினமலர்  தினமலர்
மொத்தவிலை பணவீக்கத்தில் மாற்றமில்லை

புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, அரசு புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

விலை பணவீக்க குறியீடு என்பது, மொத்த விலையில் விற்கப்படும் பொருட்களின் விலை நிலவரத்தை குறிப்பதாகும். மாதம் தோறும் இது குறித்த புள்ளி விபரத்தை அரசு வெளியிடுகிறது. மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில், 1.08 சதவீதமாக இருந்தது. இந்நிலை, ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. விலை ஏற்றம்உணவு பொருட்கள் விலை அதிகரித்திருந்த நிலையிலும், மொத்தவிலை பணவீக்கத்தில், எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்தில், மொத்தவிலை பணவீக்க விகிதம், அதற்கு முன்பு, 25 மாதங்களில் இல்லாத வகையில், 1.08 சதவீதமாக குறைந்து இருந்தது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மொத்தவிலை பணவீக்க விகிதம், 4.62 சதவீதமாக அதிகரித்து இருந் தது குறிப்பிடத்தக்க ஒன்று.உணவு பொருட்களின் பணவீக்கம், ஜூலை மாதத்தில், 6.15 சதவீதமாக இருந்தது. இது தற்போது, ஆகஸ்ட் மாதத்தில், 7.67 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதற்கு காய்கறிகளின் விலை ஏற்றமும், புரதச் சத்து அதிகம் கொண்ட உணவு பொருட்களின் விலை ஏற்றமும் முக்கிய காரணம்.

பணவீக்க குறியீட்டில், அடிப்படை பொருட்களான, உணவு, காய்கறி ஆகியவற்றின் பங்களிப்பு 22.62 சதவீதமாகும்.அரசு தகவல்காய்கறிகள் பணவீக்கம், ஜூலை மாதத்தில், 10.67 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், 13.07 சதவீதமாக அதிகரித்துள்ளது.புரத சத்து மிகுந்த முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் பணவீக்கம், ஜூலை மாதத்தில், 3.16 சதவீதமாக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில், 6.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் பணவாட்டம், ஜூலை மாதத்தில், 3.64 சதவீதமாக இருந்தது. ஆகஸ்டில், 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.


தயாரிப்பு துறை உற்பத்தி பிரிவானது, மொத்த விலை பணவீக்கத்தில், 64.23 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த பிரிவின் பணவாட்டம், ஆகஸ்ட் மாதத்தில், 0.3 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 12ம் தேதியன்று, சில்லரை விலை பணவீக்கம் குறித்து அரசு தகவல்களை வெளியிட்டது.இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், கடந்த, 10 மாதங்களில் இல்லாத வகையில், அதிகரித்து, 3.21 சதவீதமாக இருந்தது.இந்த உயர்வுக்கு, உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக இருந்தது. குறிப்பாக, இறைச்சி, மீன், காய்கறி, பருப்பு வகைகள் விலை அதிகரித்து காணப்பட்டது.


இருப்பினும், சில்லரை விலை பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும், அதன் இலக்கான, 4 சதவீதத்துக்குள்ளேயே இருப்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. வட்டிவிகித குறைப்புசில்லரை விலை பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில், 3.15 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 3.69 சதவீதமாக இருந்தது.இந்நிலையில், அடுத்த மாதம், 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், மீண்டும் ஒரு வட்டிவிகித குறைப்பு அறிவிப்பு வரலாம் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டில் மட்டும், நான்கு முறை வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை மொத்தம், 1.10 சதவீதம் அளவுக்கு, ரெப்போ வட்டியை, ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை