மன்னிப்பு கேட்டார் கார்த்திக் | செப்டம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
மன்னிப்பு கேட்டார் கார்த்திக் | செப்டம்பர் 08, 2019

புதுடில்லி: கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், அனுமதி இல்லாமல் வீரர்களின் ‘டிரெசிங் ரூமில்’ அமர்ந்த காரணத்திற்காக, இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பி.சி.சி.ஐ.,யிடம் மன்னிப்பு கோரினார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதைத்தவிர, வெளிநாட்டில் நடக்கும் எந்தவொரு லீக் தொடரிலும் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கிடையே, இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், கரீபியன் பிரிமியர் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ‘டிரெசிங் ரூமில்’ அந்த அணி ‘ஜெர்சியுடன்’ அமர்ந்திருந்தார். இவருடன், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலமும் இருந்தார். இப்புகைப்படம் வெளியானதால், தினேஷ் கார்த்திக்கின் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என பி.சி.சி.ஐ., கேள்வி எழுப்பி இருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

என்ன காரணம்

இதற்கு, தினேஷ் கார்த்திக் பி.சி.சி.ஐ.,க்கு எழுதியுள்ள கடிதத்தில்,‘ டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் சார்பில் எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. நான் வழிநடத்தும் கோல்கட்டா ஐ.பி.எல்., அணியின் பயிற்சியாளராக, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளார். டிரின்பாகோ அணிக்கும் இவரே தலைமைப்பயிற்சியாளராக உள்ளார். அணி குறித்து ஆலோசிக்க என்னை வெஸ்ட் இண்டீசுக்கு அழைத்தார். இதற்காகவே, ‘டிரெசிங் ரூமில்’ அமர்ந்திருந்தேன். உங்களிடம் அனுமதி பெறாமல், வெஸ்ட் இண்டீஸ் சென்றதற்கு மன்னிப்பு கோருகிறேன்,’’ என, தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இப்பிரச்னை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

 

மூலக்கதை