வரலாறு படைத்தது ஆப்கன்: வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
வரலாறு படைத்தது ஆப்கன்: வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் | செப்டம்பர் 09, 2019

சிட்டகாங்: சிட்டகாங் டெஸ்டில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி, 224 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, புதிய வரலாறு படைத்தது. ‘சுழல் ஜாலம்’ காட்டிய கேப்டன் ரஷித் கான், 11 விக்கெட் (5+6) கைப்பற்றி ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

வங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. சிட்டகாங்கில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342, வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்கள் எடுத்தது. பின், 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. சாகிப் அல் ஹசன் (39), சவுமியா சர்கார் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரஷித் அசத்தல்: ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கு பின், மீண்டும் போட்டி தொடர்ந்தது. ஜாகிர் கான் வீசிய முதல் பந்தில் கேப்டன் சாகிப் அல் ஹசன் (44) அவுட்டானார். ரஷித் கான் ‘சுழலில்’ மெகிதி ஹசன் மிராஸ் (12), தைஜுல் இஸ்லாம் (0), சவுமியா சர்கார் (15) சிக்கினர்.

இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 173 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. நயீம் ஹசன் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6, ஜாகிர் கான் 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் விருதை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் வென்றார்.

வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, 2வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 3 டெஸ்டில், 2 வெற்றி (எதிர்: அயர்லாந்து, வங்கதேசம், 2019), ஒரு தோல்வியை (எதிர்: இந்தியா, 2018) பதிவு செய்தது. இதன்மூலம் குறைந்த டெஸ்டில், 2வது வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் (முதல் 3 டெஸ்ட், 2 வெற்றி, ஒரு தோல்வி) பகிர்ந்து கொண்டது.

* இந்திய அணிக்கு 30வது டெஸ்டில் தான், 2வது வெற்றி கிடைத்தது.

சிட்டகாங் டெஸ்டில் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், ஒரு அரைசதம் (51), 11 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்டில், ஒரு அரைசதம், 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார்.

* தவிர இவர், ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு அரைசதம் மற்றும் 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 3வது கேப்டன் ஆனார். ஏற்கனவே பாகிஸ்தானின் இம்ரான் கான் (எதிர்: இந்தியா, 1983), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (எதிர்: விண்டீஸ், 1989) இப்படி சாதித்திருந்தனர்.

* டெஸ்ட் அரங்கில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் வெற்றி தேடித்தந்த இளம் கேப்டன் என்ற பெருமை பெற்றார் ரஷித் கான் 20.

ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த வங்கதேச அணி, டெஸ்ட் அரங்கில் 10 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த முதல் அணியானது.

இப்போட்டியுடன் ஆப்கானிஸ்தான் ‘ஆல்–ரவுண்டர்’ முகமது நபி 34, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர், இதுவரை 3 டெஸ்ட் (33 ரன், 8 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மூலக்கதை