கார்ப்பரேட் வரியை குறைக்க சிறப்பு குழு பரிந்துரை; கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய யோசனை

தினமலர்  தினமலர்
கார்ப்பரேட் வரியை குறைக்க சிறப்பு குழு பரிந்துரை; கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய யோசனை

புதுடில்லி: கார்ப்பரேட் வரியை, அனைத்து நிறுவனங்களுக்கும், 25 சதவீதமாக குறைக்கலாம் என, அரசு அமைத்த சிறப்புக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.


தற்போது, கார்ப்பரேட் வரி, 30 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிவிகிதத்தை, எந்த வேறுபாடும் பார்க்காமல், அனைத்து நிறுவனங்களுக்கும், 25 சதவீதமாக குறைக்கலாம் என்றும், வரி செலுத்தலுக்கான கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்யலாம் என்றும், அரசாங்க குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.


இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகில், அதிக அளவு கார்ப்பரேட் வரிவிகிதம் உடைய நாடுகளில், இந்தியாவும் ஒன்று.நம் நாட்டில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 30 சதவீத கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 40 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது. மேலும், வரி செலுத்தலின் மீது, சுகாதாரம் மற்றும் கல்விக்கான கூடுதல் கட்டணமாக, 4 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. மேலும் நிறுவனத்தின், வரி விதிக்கக்கூடிய வருமானம், 10 கோடி ரூபாயை தாண்டினால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 12 சதவீதமும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 5 சதவீதமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


பட்ஜெட் உரையின் போது, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், ஆண்டு விற்பனை, 400 கோடி ரூபாய் வரை உள்ள நிறுவனங்களுக்கான கார்ப் பரேட் வரியை, 30 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைத்து அறிவித்தார். இந்நிலையில், சிறப்புக் குழுவானது, ‘அனைத்து நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் வரியை, 30 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைக்கலாம் என்றும், வரி செலுத்தலுக்கான கூடுதல் கட்டணத்தையும் நீக்கி விடலாம்’ என, பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


நேரடி வரிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, மத்திய நிதித் துறை, சிறப்பு குழு ஒன்றை, அகிலேஷ் ரஞ்சன் தலைமையில், கடந்த நவம்பரில் அமைத்தது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சட்டமியற்றும் பிரிவின் உறுப்பினராக, அகிலேஷ் ரஞ்சன் உள்ளார். இந்த சிறப்புக் குழு, நேற்று முன்தினம், அறிக்கையை நிதியமைச்சரிடம், தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள், விரைவில், நிதித்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளன.


படிப்படியாக குறைக்கப்படும்:
‘அனைத்து நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் வரியை, 25 சதவீதமாக குறைக்கலாம்’ என, சிறப்பு குழு பரிந்துரைத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், பெரிய நிறுவனங்களுக்கான, கார்ப்பரேட் வரி, படிப்படியாக, 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.400 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கான, கார்ப்பரேட் வரி, படிப்படியாக, 25 சதவீதமாக குறைக்கப்படும். மேலும், செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு, அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது, நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் மேலும் பேசியதாவது: தொழில்முனைவோர் தான், இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்குவோர். அவர்கள் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நாங்கள், அவர்கள் குறித்து பெருமிதம் கொள்கிறோம். நாங்கள், அவர்களுக்கு ஆதரவளிப்போம்; ஊக்குவிப்போம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை