லார்ட்ஸ் டெஸ்ட்: ‘டிரா’ செய்தது ஆஸி., | ஆகஸ்ட் 18, 2019

தினமலர்  தினமலர்
லார்ட்ஸ் டெஸ்ட்: ‘டிரா’ செய்தது ஆஸி., | ஆகஸ்ட் 18, 2019

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்சில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான 2வது போட்டியை ஆஸ்திரேலிய அணி ‘டிரா’ செய்தது. பொறுப்பாக ஆடிய லபுசேன் அரைசதம் கடந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258, ஆஸ்திரேலியா 250 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 96 ரன் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் (16), பட்லர் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டோக்ஸ் அபாரம்: நேற்றைய 5ம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது.  ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் பந்தில் பட்லர் (31) அவுட்டானார். லியான் வீசிய 64வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசிய ஸ்டோக்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்டோக்ஸ் (115), ஜானி பேர்ஸ்டோவ் (30) அவுட்டாகாமல் இருந்தனர். 

கடைசி நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (42), கம்மின்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என, முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார். நேற்றைய கடைசி நாள் ஆட்டத்திலும் ‘வேகத்தில்’ மிரட்டிய ஆர்ச்சர் ‘பவுன்சராக’ வீசினார். இவர் வீசிய ‘பவுன்சர்’ பந்து (5.4 ஓவர்) மார்னஸ் லாபுசாக்னேயின் ‘ஹெல்மெட்டில்’ பலமாக தாக்கியது.

மூலக்கதை