மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி

கயானா: இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இப்போட்டி துவங்கவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை  3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்த விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இன்று களமிறங்குகிறது. அதே சமயம் டி20 தொடரை இழந்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், முழு திறனை வெளிப்படுத்தி ஒருநாள் தொடரை கைப்பற்ற போராடுவார்கள் என்பதால், இத்தொடரில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.



சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெய்லும், எவின் லூயிசும் போதிய ரன்களை குவிக்க தவறிவிட்டனர். இதனால் அந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் ஓய்வு பெற உள்ளேன் என்று அறிவித்திருந்த கிறிஸ் கெய்ல், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு, சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். அதனால் இன்றைய போட்டியில் அவரே துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குகிறார்.

 
அவருடன் எவின் லூயிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல் துவக்க ஆட்டக்காரராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 3வது வீரராகவும், நிகோலஸ் பூரன் 4வது வீரராகவும் ஆட உள்ளனர்.

தொடர்ந்து ஹெட்மெயர், பிராத்வெய்ட், கேப்டன் ஜேசன் ஹோல்டர் என அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாகவே காட்சியளிக்கிறது. இவர்களில் 2 அல்லது 3 பேர்  சொந்த மண்ணில் பெரிய ஸ்கோரை எட்டும் பட்சத்தில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

கீமர் ரோச், ஒசானே தாமஸ் மற்றும் ஷெல்டன் காட்டரெல் என அணியின் பவுலர்களும் சொந்த மைதானங்களில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மறுபுறம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் மிரட்டலாகவே உள்ளது.

வெற்றிகரமான துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா-ஷிகர் தவான் ஜோடி, 3வது வீரராக கேப்டன் விராட் கோஹ்லி, தொடர்ந்து கே. எல். ராகுல் என இந்திய அணிலும் பேட்ஸ்மென்கள் வரிசை கட்டுகின்றனர்.

டி20 தொடரில் மனீஷ் பாண்டே எதிர்பார்த்த அளவிற்கு பிரகாசிக்காததால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று கயானாவில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒருநாள் போட்டி தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்வார் என்று கேப்டன் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நவ்தீப் சைனி, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஷ் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் என இந்திய அணியின் பவுலர்களும் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மென்களுக்கு அவர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.   கயானாவில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

மழை உறுதி என்றால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாராவை முந்துகிறார் கெய்ல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரைன் லாரா, ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 299 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், அதில் 19 சதங்கள், 63 அரை சதங்களுடன் சராசரியாக 40. 48 ரன்கள் வைத்துள்ளார்.

இதுவரை 298 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல், அதில் 10,393 ரன்கள் எடுத்துள்ளார். லாராவின் சாதனையை முறியடிக்க இன்றைய போட்டியில் கெய்ல் 13 ரன்கள் எடுக்க வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் கெய்ல் 25 சதங்கள், 53 அரை சதங்களுடன் சராசரியாக 37. 93 ரன்கள் வைத்துள்ளார்.


.

மூலக்கதை