சோகத்தில் பின்ச் | ஜூலை 12, 2019

தினமலர்  தினமலர்
சோகத்தில் பின்ச் | ஜூலை 12, 2019

பர்மிங்காம்: ‘‘கடந்த 12 மாதமாக, ஆஸ்திரேலிய அணி பெரிய பிரச்னையிலிருந்து மீண்டு வந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோற்றது மோசமான செயல்பாடாக அமைந்தது,’’ என ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது. இதற்கு முன், உலக கோப்பை அரையிறுதியில் பங்கேற்ற 7 முறையும் ஆஸ்திரேலியா வென்றதால், எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய ‘டாப் ஆர்டர்’ விரைவில் சரிய, அணி 223 ரன்களுக்கு சுருண்டது. ஜேசன் ராய் (85), ரூட் (49) உள்ளிட்டோர் கைகொடுக்க இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இங்கிலாந்து அணி 1992க்குப்பின் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தது.

மோசமான செயல்பாடு

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் கூறுகையில்,‘‘ கடந்த 12 மாதமாக, ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய பிரச்னையிலிருந்து மீண்டு வந்துள்ளது. இதை எண்ணி பெருமை கொள்கிறேன். உலக கோப்பையை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்தில் இங்கிலாந்து வந்தோம். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோற்றது ஏமாற்றம். இது நடப்பு உலக கோப்பை தொடரில் எங்களின் மோசமான செயல்பாடாக அமைந்துவிட்டது.

மாற்றம் வேண்டும்

முதல் 10 ஓவரில் ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. பந்துவீச்சின் தன்மையை புரிந்து எதிர் கொண்டிருக்க வேண்டும். இதில் தவறியதால் துவக்கத்திலேயே அதிர்ச்சி கிடைத்தது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சிறப்பான ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்தனர். ‘சேசிங்கில்’ துவக்க வீரர் ஜேசன் ராய் எங்களுக்கு தொல்லையாக அமைந்துவிட்டார். உலக கோப்பையில் என்ன தவறு செய்தோம் என எங்களுக்குள் விவாதிக்க வேண்டும். சில மாற்றங்கள் செய்வதன் மூலம், உலக கோப்பையில் நான்கு ஆண்டுக்குப்பின் மீண்டும் சாதிக்கலாம். பைனலில் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து கோப்பை வெல்லுமா என கணிப்பது கடினம்,’’ என்றார்.

 

மூலக்கதை