தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு

தினமலர்  தினமலர்
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடுமையான சரிவைக் கண்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், நாடு முடக்கப்பட்டதை அடுத்து, தயாரிப்பு துறை, இத்தகைய சரிவைக் கண்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுஉள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

இந்தாண்டு, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 30.8 புள்ளிகளாக சரிந்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தை விட இது சற்று அதிகமாகும். கடந்த ஏப்ரலில், உற்பத்தி வளர்ச்சி,w 27.4 புள்ளிகளாக இருந்தது.தொடர்ந்து, 32 மாதங்களாக உற்பத்தி வளர்ச்சி அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், கொரோனாவால், வரலாற்று சரிவு ஏற்பட்டது.‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

மே மாதத்தில், இக்குறியீடு, 30.8 புள்ளிகளுக்கு சரிந்ததன் மூலம், கடுமையான பாதிப்பை உணர்த்தியுள்ளது.சமீபத்திய இந்த தரவுகள், மே மாதத்தில் தயாரிப்புத்துறை வளர்ச்சி சரிவை உறுதிபடுத்தி உள்ளன. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, ஏப்ரல் மாதத்தின் தொடர்ச்சியாக,மே மாதத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாத நிலவரத்தை அடுத்து, நிறுவனங்கள் ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, உலகளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஏற்றுமதியை பாதிப்பதாக அமைந்துள்ளன. இருப்பினும், இந்திய உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டு வளர்ச்சி குறித்து, மே மாத ஆய்வின் போது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து உள்ளனர். வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டவுடன், வளர்ச்சிக்கு திரும்புவதற்கான எதிர்பார்ப்புகளுடன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

தற்போது மே மாதத்திலும் சரிவு ஏற்பட்டிருப்பது, வணிகங்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. தேவைகள் குறைந்துள்ளதோடி, தொற்று நோய் பிரச்னை எப்போது தீரும் என்பதும் நிச்சயமற்றதாக இருக்கிறது.

-எலியட் கெர், பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ். மார்க்கிட்

மூலக்கதை