இந்திய வீரர்களுக்கு அனுமதி: உத்தப்பா வேண்டுகோள் | மே 22, 2020

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்களுக்கு அனுமதி: உத்தப்பா வேண்டுகோள் | மே 22, 2020

புதுடில்லி: ‘‘அன்னிய மண்ணில் நடக்கும் ‘டுவென்டி–20’ லீக் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’’ என, ராபின் உத்தப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், அன்னிய மண்ணில் நடக்கும் பிக்பாஷ் லீக் (பி.பி.எல்.,), கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) உள்ளிட்ட ‘டுவென்டி–20’ தொடர்களில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதிப்பது கிடையாது. ஓய்வு அறிவித்தால் இதற்கு அனுமதி பெறத் தேவையில்லை. இத்தொடரில் விளையாட அனுமதி அளிக்கும்படி பி.சி.சி.ஐ.,க்கு ரெய்னா, இர்பன் பதான் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது இதே கருத்தை ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து உத்தப்பா கூறியது: தயவு செய்து, வெளிநாடுகளில் நடக்கும் ‘டுவென்டி–20’ லீக் தொடர்களில் பங்கேற்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள். இல்லையென்றால் வேதனையாக இருக்கும். குறைந்தபட்சம் இருவருக்கு அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும். ஏனெனில் கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறோம்.

சவுரவ் கங்குலி, மிகவும் முற்போக்கான சிந்தனை மனிதர். இவர், எப்போதும் இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைப்பவர். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த இவர், நிச்சயமாக ஒரு நாள் முன்னேற்றத்தை காண்பார்.

இவ்வாறு உத்தப்பா கூறினார்.

மூலக்கதை