ஐ.பி.எல்., தொடருக்கு முன்னுரிமையா: ஆலன் பார்டர் கோபம் | மே 22, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடருக்கு முன்னுரிமையா: ஆலன் பார்டர் கோபம் | மே 22, 2020

மெல்போர்ன்: ‘‘உலக கோப்பை தொடரை (‘டுவென்டி–20’) விட, ஐ.பி.எல்., தொடருக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது,’’ என, ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், வரும் அக். 18 – நவ. 15ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. ஒருவேளை இத்தொடர் ரத்தானால், இக்கால கட்டத்தில் ஐ.பி.எல்., தொடர் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்டர் கூறியது: ‘டுவென்டி–20’ உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டு, ஐ.பி.எல்., தொடரை நடத்துவதில் மகிழ்ச்சி இல்லை. இதனை ஏற்றுக் கொள்ளமாட்டேன். உள்ளூர் போட்டியை விட, சர்வதேச போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உலக கோப்பை நடக்காத நிலையில், ஐ.பி.எல்., தொடர் மட்டும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நடந்தால் கேள்வி எழுப்புவேன். இதனை பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாக கருதுவேன்.

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருவேளை இக்காலகட்டத்தில் ஐ.பி.எல்., தொடர் நடத்தப்பட்டால், இதில் பங்கேற்க ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் தங்களது வீரர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது, தவறான பாதையில் செல்வதற்கு சமம்.

வியர்வை அல்லது எச்சிலுக்கு பதிலாக வேறு ஒரு செயற்கையான பொருளை கொண்டு பந்தை பளபளபாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஆலன் பார்டர் கூறினார்.

ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவது குறித்து முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறுகையில், ‘‘முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பதை விட, உள்ளூர் போட்டியில் விளையாட கடமைப்பட்டுள்ளார்கள். ஏனெனில் அவர்களின் நிதி தேவைகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) பூர்த்தி செய்துள்ளது,’’ என்றார்.

மூலக்கதை