ஐ.பி.எல்., தொடர் உறுதி * செப்டம்பரில் துவங்க திட்டம் | மே 20, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடர் உறுதி * செப்டம்பரில் துவங்க திட்டம் | மே 20, 2020

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் வரும் செப்டம்பர் மாத கடைசியில் துவங்கும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 30ம் தேதி துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து ரத்து, நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

ஒருவேளை ஐ.பி.எல்., நடக்கவில்லை என்றால் ரூ. 4,000 கோடி வரை இழப்பு ஏற்படும், வீரர்கள் சம்பளம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நான்காவது கட்ட ஊரடங்கின் போது, ‘ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இதனால் ஐ.பி.எல்., தொடரை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., தொடர் நடத்துவது குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது. பல்வேறு விஷயங்களில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதேநேரம் வரும் செப்., 25 முதல் நவ., 1 வரையிலான தேதிகளில் 13வது ஐ.பி.எல்., தொடரை நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் தற்போதுள்ள போல அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கொரோனா தொற்று குறைந்து, அரசு அனுமதி தரும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

மற்றொரு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘பி.சி.சி.ஐ., தரப்பில் செப்.,–நவ.,ல் ஐ.பி.எல்., தொடர் நடத்தலாம் என கூறியது உண்மை தான். ஆனால் எந்த இடத்தில், எப்படி நடக்கும் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அன்னிய வீரர்களுக்கு அனுமதி தரப்படுமா என்பதும் தெரியவில்லை. அடுத்தடுத்த அறிவிப்பில் இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்குமும் என நம்புகிறோம்,’’ என்றார்.

 

தடை எது

ஆஸ்திரேலிய மண்ணில் வரும் அக்., 18–நவ., 15ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஆனால் இத்தொடர் நடக்காது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை ‘உலக’ தொடர் ரத்தானால், ஐ.பி.எல்., நடக்க அதிக வாய்ப்புள்ளது.

மூலக்கதை