அமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020

தினமலர்  தினமலர்
அமெரிக்க அணியில் தென் ஆப்ரிக்க வீரர் | மார்ச் 28, 2020

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்ரிக்க வீரர் டேன் பீட், அமெரிக்க அணியில் இணைய உள்ளார்.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேன் பீட் 30. சுழற்பந்துவீச்சாளரான இவர், இதுவரை 9 டெஸ்டில் (26 விக்கெட்) பங்கேற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ராஞ்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். ஒருநாள், ‘டுவென்டி–20’யில் ஷாம்சி, டெஸ்டில் கேஷவ் மஹராஜ் சிறப்பாக விளையாடி வருவதால் இவருக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ (2021, இந்தியா), 50 ஓவர் (2023, இந்தியா) உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன. இதற்கு டேன் பீட் தேர்வு செய்யப்படுவது கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அணிக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனையடுத்து டேன் பீட், அமெரிக்க அணியில் இணைய முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவுக்கு குடிபெயர உள்ள இவர், அங்கு நடக்கும் ‘மைனர் லீக் டுவென்டி–20’ தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் அமெரிக்காவுக்கு விளையாட தகுதி பெறலாம்.

இதுகுறித்து டேன் பீட் கூறுகையில், ‘‘தென் ஆப்ரிக்க லெவன் அணியில் சுழற்பந்துவீச்சாளருக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே, கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்ற அமெரிக்க அணியில் இணைய முடிவு செய்துள்ளேன். இதற்காக வேகப்பந்துவீச்சாளர் ரஸ்டி தீரனிடம் சில ஆலோசனைகள் பெற்றேன்,’’ என்றார்.

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவுக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ரஸ்டி தீரன் 34, தற்போது அமெரிக்காவுக்காக விளையாடி வருகிறார்.

மூலக்கதை