பூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020

தினமலர்  தினமலர்
பூஜாவுக்கு உதவும் புஜாரா | மார்ச் 28, 2020

ராஜ்கோட்: ‘‘எனது செல்ல மகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன். மனைவி பூஜாவுக்கு தேவையான உதவிகளை செய்து வீட்டிலேயே இருக்கிறேன்,’’என, புஜாரா தெரிவித்தார்.

‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குஜராத்தை சேர்ந்த இந்திய அணியின் டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ புஜாராவும் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து புஜாரா கூறியது:

கடினமான காலக்கட்டத்தில் உள்ளோம். வீட்டில் இருப்பதன் மூலமே ‘கொரோனா’ தொற்றை தடுக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. குடும்பத்திற்காகவும் நாட்டுக்காவும் தனித்து இருக்க வேண்டும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். பதட்டப்படாமல் இருங்கள். சுயநலத்தை விட்டு விடுங்கள்.

‘கொரோனா’வின் பிடியில் விளையாட்டு உலகமும் சிக்கியுள்ளது. ரசிகர்களால் மைதானத்திற்கு வர முடியவில்லை. விளையாட்டு வீரன் களத்தில் சாதிக்க வேண்டும். ராணுவ வீரன் போர்க்களத்தில் சண்டையிட வேண்டும். இந்த முறை வீட்டில் இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஜெயிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். வீட்டில் இருந்தவாறு புத்தகம் படிக்கிறேன். ‘டிவி’ பார்க்கிறேன். பெரும்பாலான நேரத்தை எனது செல்ல மகளுடன் செலவிடுகிறேன். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என பொழுதை கழிக்கிறோம். மனைவி பூஜாவுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். வீட்டிலேயே ‘ஜிம்’ இருப்பதால், உடற்பயிற்சிக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.  உரிய பயிற்சிகள் செய்து உடலை, ‘பிட்’ ஆக வைத்துள்ளேன்.

இவ்வாறு புஜாரா கூறினார்.

மூலக்கதை