பெண்களுக்கான ஐ.பி.எல்., எப்போது: மிதாலி ராஜ் திட்டவட்டம் | மார்ச் 26, 2020

தினமலர்  தினமலர்
பெண்களுக்கான ஐ.பி.எல்., எப்போது: மிதாலி ராஜ் திட்டவட்டம் | மார்ச் 26, 2020

புதுடில்லி: ‘‘அடுத்த ஆண்டு பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடர் நடத்தப்பட வேண்டும்,’’ என, இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல், ஆண்களுக்கான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடரை நடத்த கோரிக்கை எழுந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2018ல், 2 அணிகள் மட்டும் பங்கேற்ற பெண்களுக்கான ‘டுவென்டி–20’ சேலஞ்ச் தொடர் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 3 அணிகளுக்கு இடையிலான சேலஞ்ச் தொடர் நடந்தது. இந்த ஆண்டு 4 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான ‘டுவென்டி–20’ சேலஞ்ச் தொடர் (மே 17–23) ஜெய்ப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 13வது ஐ.பி.எல்., சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சேலஞ்ச் தொடர் நடப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், அடுத்த ஆண்டு பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடரை நடத்த வேண்டும் என, பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதே கருத்தை இந்திய பெண்கள் ஒருநாள் போட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மிதாலி ராஜ் கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு முதல், பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடரை நடத்த வேண்டும். போதுமான இந்திய வீராங்கனைகள் இல்லாத நிலையில், ஒரு அணியில் 5 அல்லது 6 வெளிநாட்டு வீராங்கனைகளை சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். முதலில் 4 அணிகளை வைத்து தொடரை நடத்தி, பின் படிப்படியாக அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அப்போது ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீராங்கனைகளை இடம் பெறச் செய்யலாம். இதற்காக நீங்கள் எப்போதும் காத்திருக்க முடியாது. ஒரு கட்டத்தில் துவக்கியாக வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை