நிறுவனங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
நிறுவனங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி : ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு காரணமாக, பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு, இந்திய நிறுவனங்களை, நிபுணர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.மேலும், ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, சம்பளத்தை குறைப்பது போன்ற விஷயங்களில், மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.இது குறித்து, அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள்:கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இந்திய பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


நடப்பு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான சவால் மிக அதிகமாக இருக்கும்.இத்தகைய நிலையில், நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு, ஆட்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது பொருளாதார மந்தநிலையிலிருந்து நாடு மீள்வதை மேலும் தாமதப்படுத்தும்.

பல துறைகளில், குறிப்பாக உற்பத்தி துறையில் ஒப்பந்த பணியாளர்கள் ஏற்கனவே நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்த முடிவால், தங்கள் தினசரி ஊதியத்தை இழந்து வருகின்றனர்.மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், சம்பளக் குறைப்பு மற்றும் ஊதிய உயர்வை அறிவிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றை, அடுத்த மாதத்தில் அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள ஊழியர்களை தக்க வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்க வேண்டியது, நிறுவனங்களின் பொறுப்பாகும்.ஊழியர்களின் ஊதியங்களில் கை வைக்காமல், பல்வேறு பகுதிகளில் செலவுகளை குறைத்துக் கொள்ள இயலும். குறிப்பாக விளம்பரங்கள், பயணம், பயிற்சி செலவுகள் உள்ளிட்ட பகுதிகளில் செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும்.

இது, ஒரு வித்தியாசமான சூழ்நிலையாகும். நிறுவனர்களுக்கும், பணியாளர்களுக்கும் சமமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை. இருந்தாலும், நிறுவனங்கள், ஊழியர்கள் குறித்த முடிவை அனுதாபத்துடன் அணுக வேண்டும். நிறுவனங்கள் ஊழியர்களிடம் திறந்த மனதுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.நிறுவனங்கள், ஊழியர்கள் மீதான கரிசனத்தையும், மதிப்பையும் உணர்த்துவதற்கு உரிய தருணம் இதுவாகும்.

கொரோனா பாதிப்பு, வீட்டிலிருந்து பணியாற்றுவது குறித்த அனுபவத்தை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம். வணிகங்கள் தங்கள் தொழில்நுட்ப திறனை அதிகரித்து கொள்ள இயலும். இவ்வாறு, தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை