கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்

ஸ்பெயின்: நடப்புச் சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி, எய்பார் அணியுடன் மோதியது. பார்சிலோனா அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்க ஆட்டம் தொடங்கியதிலிருந்தே பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது.

அணியின் கேப்டனான மெஸ்ஸி (22) ஆட்டத்தின் 14, 37, 40, 87 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், கடந்த நான்கு போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததற்கு இப்போட்டியில் மெஸ்ஸி நான்கு கோல் அடித்து ஈடுசெய்துள்ளார்.

இதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகள், கிளப் போட்டிகள் என 1,000 கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலகச் சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

இவர் இதுவரை அர்ஜென்டினா நாட்டிற்காகவும், பார்சிலோனா கிளப் அணிக்காகவும் 696 கோல்களை அடித்தது மட்டுமின்றி 306 அசிஸ்டுகளையும் வழங்கியுள்ளார், பார்சிலோனா அணி இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியை வீழ்த்தியது.

மற்றொரு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், பார்சிலோனா அணி இந்தச் சீசனில் விளையாடிய 25 போட்டிகளில் 17 வெற்றி, நான்கு டிரா, நான்கு தோல்வி என 55 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மறுமுனையில், ரியல் மாட்ரிட் அணி 25 போட்டிகளில் 15 வெற்றி, எட்டு டிரா, இரண்டு தோல்வி என 53 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆறு பலான் டி ஆர், ஆறு பிபாவின் சிறந்த வீரர், ஆறு கோல்டன் பூட் உள்ளிட்ட விருதுகளை வென்ற மெஸ்ஸி, கடந்தாண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதை முதன்முதலாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை