மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 3.1 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 3.1 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில், 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.


இது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஜனவரி மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, டிசம்பர் மாதத்தில், 2.59 சதவீதமாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 2.76 சதவீதமாக இருந்தது.


விலை உயர்வு


நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், பணவீக்கம் அதிகரித்ததற்கு, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வே காரணம்.கடந்த ஜனவரி மாதத்தில், உணவுப் பொருட்களின் விலை, 11.51 சதவீதம் அதிகரித்துஉள்ளது. இதுவே, கடந்த டிசம்பர் மாதத்தில், 2.41 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலை, நவம்பர் மாதத்தை விட, ஜனவரியில், 3 மடங்கு அதிகரித்து, 7.8 சதவீதமாக உயர்ந்துஉள்ளது. நவம்பர் மாதத்தில் இது, 2.32 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்களில் காய்கறிகளின் விலை, குறிப்பாக, வெங்காயத்தால், 52.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கின் விலை, 37.34 சதவீதம் உயர்ந்துஉள்ளது.


ஆறு ஆண்டுகள்


இதே போல், சில்லரை விலை பணவீக்கமும், கடந்த ஜனவரி மாதத்தில், ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 7.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன், 2014ம் ஆண்டு, மே மாதத்தில், 8.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை