புதிய கார்ப்பரேட் வரி படிவங்கள் அறிவிப்பு:மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்கள்

தினமலர்  தினமலர்
புதிய கார்ப்பரேட் வரி படிவங்கள் அறிவிப்பு:மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்கள்

புதுடில்லி:மத்திய நேரடி வரிகள் வாரியம், கார்ப்பரேட் வரி குறைப்பை, நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான படிவங்களை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை குறைத்து அறிவித்தார்.


குறைந்த வரி



இதையடுத்து, இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம், நிறுவனங்கள் வரி குறைப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான படிவங்களை அறிவித்துள்ளது.இதன்படி, 10 ஐ.சி., மற்றும் 10 ஐ.டி., எனும் இரு படிவங்களை வாரியம் அறிவித்துள்ளது. இதில், 10 ஐ.சி., படிவம், ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், குறைந்த வரி விகிதத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், 10 ஐ.டி., படிவம், புதிய தயாரிப்பு நிறுவனங்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.


கடந்த செப்டம்பர் மாதத்தில், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் அடிப்படை கார்ப்பரேட் வரியை, 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக குறைத்து அறிவித்தது, மத்திய அரசு.மேலும், கடந்த அக்டோபர், 1ம் தேதிக்கு பின் துவங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கும், 2023ம் ஆண்டு மார்ச், 31ம் தேதிக்கு முன்னதாக செயல்படத் துவங்கிவிட்ட நிறுவனங்களுக்கும், வரியை, 25 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக குறைத்து அறிவித்தது.


மின் படிவம்


மேலும், இந்த புதிய வரி விகிதங்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள், அனைத்து விலக்குகளையும், சலுகைகளையும் கைவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அப்படி கைவிடும்பட்சத்தில், கூடுதல் வரிகளான கல்வி, துாய்மை இந்தியா போன்றவற்றுக்கான வரிகளுடன் சேர்த்தால், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கு, 25.17 சதவீதம் வரி இருக்கும். இது தற்போது, 34.94 சதவீதமாக இருக்கிறது.


இதேபோல், புதிதாக துவக்கப்படும் நிறுவனங்களுக்கு, வரி, 17.01 சதவீதமாக இருக்கும். இது தற்போது, 29.12 சதவீதமாக உள்ளது.வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலக்குகள் மற்றும் சலுகைகளை கைவிடுவதன் மூலம், 22 சதவீத வரி வாய்ப்பை பெற விரும்பும் நிறுவனங்களால், படிவம் – 10 ஐ.சி., தாக்கல் செய்யப்பட வேண்டும்.


மேலும், மின் படிவம் – 10 ஐ.சி.,யில், ‘டிஜிட்டல்’ கையெழுத்து அல்லது மின்னணு சரிபார்ப்பு குறியீடு அதாவது, இ.வி.சி., ஆகியவை இருக்க வேண்டும். அத்துடன், நிறுவனத்தின் பொதுவான விபரங்களான பான் எண், நிறுவன பதிவு தேதி, முகவரி, தொழிலின் தன்மை ஆகியவையும் வழங்கப்பட வேண்டும்.மாற்ற முடியாதுஅது மட்டுமின்றி, நிறுவனம் இந்த புதிய வரி முறையை, ஒரு முறை தேர்வு செய்தால், பிறகு அதை மாற்ற முடியாது.


இதை போலவே, புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், படிவம் – 10 ஐ.டி.,யை மின்னணு வடிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.நிறுவனங்கள் எந்த முறையை தேர்வு செய்வது என்பதற்கு, போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என, வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது. நிறுவனங்கள், இந்த புதிய வரி முறையை ஒரு முறை தேர்வு செய்தால், பிறகு அதை மாற்ற முடியாது

மூலக்கதை