ஐ.சி.சி., தரவரிசை: பும்ரா பின்னடைவு | பெப்ரவரி 12, 2020

தினமலர்  தினமலர்
ஐ.சி.சி., தரவரிசை: பும்ரா பின்னடைவு | பெப்ரவரி 12, 2020

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ‘நம்பர்–1’ இடத்தை பறிகொடுத்தார். சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத இவர், 719 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் (727 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறினார்.

நியூசிலாந்து தொடரில் 6 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் (622) 13வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (609) 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (246 புள்ளி) 7வது இடத்துக்கு முன்னேறினார். இவர், நியூசிலாந்து தொடரில் 63 ரன், 2 விக்கெட் கைப்பற்றினார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (301) நீடிக்கிறார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி (869), ரோகித் சர்மா (855) முதலிரண்டு  இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

மூலக்கதை